வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லட்சுமி. 35 வயதான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் கண்ணில் பட்ட ஆணி, இரும்பு சங்கிலி, குண்டூசி, சாவி உள்ளிட்டவற்றை விழுங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கு இந்த சுபாவம் இருந்தது.
இதனால் லட்சுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடலில் சத்துக்கள் குறைந்து உருவம் மெலிந்து கடைசியில் பேச முடியாதவரா மாறிவிட்டார். இதைப் பார்த்த சிலர் அவருக்கு யாராவது பில்லி சூனியம் வைத்து இருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து கடந்த ஆண்டு லட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் உடல் நலம் தேறவில்லை.
இதையடுத்து அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு லட்சுமியை இறைப்பை, குடலியல் மருத்துவ துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் சந்திர மோகன், கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
எக்ஸ்ரே, எண்டோஸ் கோபி போன்ற பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தியதில் லட்சுமி வயிற்றிலும் உணவு குழாயிலும் பல்வேறு வகையான இரும்பு பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை கூர்மையாகவும், வெவ்வேறு இடங்களிலும் இருந்ததால் ஆபரேஷன் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என முடிவு செய்தனர்.
ஆனால் ரத்த சோகை நோய், மற்றும் ஊட்டச்சத்து குறைபாடால் லட்சுமி பாதிக்கப்பட்டு இருப்பதால் ஆபரேஷனுக்கு அவளது உடல் நிலை தகுதியானதாக இல்லை. இதனால் தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியிலேயே ஊட்டச்சத்து பெறுவதற்கான கிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு ஆபரேஷன் நடந்தது. அவரது வயிற்றில் இருந்து 152 வகையான இரும்பு பொருட்கள் எடுக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 478 கிராம் ஆகும். இதில் 96 சிறிய ஆணி, 23 பெரிய ஆணி, 17 கம்மல் தோடு, 3 உடைந்த வளையல் துண்டுகள், 2 காசுகள், 1 இரும்பு சங்கிலி, 1 பாசி மணி, 4 குண்டூசி, 1 கொண்டை ஊசி, 1 சாவி, மற்றும் காந்தம் பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
தற்போது குணம் அடைந்து உடல் நலம் தேறி பழைய நிலைக்கு வந்த லட்சுமியை அரசு ஆஸ்பத்திரி டீன் விமலா மற்றும் டாக்டர்கள் சந்திரமோகன், கண்ணன் குழுவினர் மீண்டும் பரிசோதனை செய்தனர். இதில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி டாக்டர்கள் கூறும் போது இது ஒரு வித்தியாசமான ஆபரேஷன், இரும்பு பொருட்களால் இறைப்பைக்கு பாதிப்பு எற்படாமல் இருக்கவும், லட்சுமியின் உடல் ஆபரேஷனுக்கு ஏற்றதாக மாற்றவும் சிகிச்சை அளித்தோம். இதற்கு நீண்ட நாள் ஏற்பட்டது. லட்சுமி இது போன்ற பொருட்களை 4 வருடங்களாக சாப்பிட்டு வந்து இருக்கலாம் என்று கருதுகிறோம்.
தனியார் மருத்துவ மனையில் இந்த ஆபரேஷனுக்கு பல லட்சம் செலவாகும், ஆனால் அரசு ஆஸ்பத்திரியில்செலவு எதுவும் இன்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக டீன் விமலா தெரிவித்தார்.

0 comments :
Post a Comment