(ஏ.எல். ஜனூவர்)
அம்பாறை மாவட்ட செயலாளர், காரைதீவு பிரதேச செயலாளர், தவிசாளர், கல்முனை மின்பொறியியலாளர், அரசியல்வாதிகளின் கவனத்திற்கு...
மாளிகைக்காடு பிரதான வீதியிலிருந்து ஆரம்பித்து சபீனா வித்தியாலய வீதியினூடாக குறுக்கறுத்துச்செல்கின்ற ஹாஜியார் வீதி பல வருடங்களாக அபிவிருத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கிடந்தது. கடந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'கமநெகும' – ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வீதி கொங்கிறீட் வீதியாக நிர்மாணிக்கப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதியின் சுமார் 80 மீற்றர் கொங்கிறீட் இடப்பட்டது. இவ்வீதியின் நடுவே போக்குவரத்திற்கு தடையாக மின்கம்பங்கள் காணப்படுவதால் அதன் நிர்மாண வேலைகள் தடைப்பட்டது. இம்மின்கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இடைநிறுத்தப்பட்டிருக்கும் வீதியை நிர்மாணித்துத்தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதி, இடையில் நிற்பதால் வடிந்தோடுவதற்கு வழியில்லாமல் வீதியிலும், வீடுகளிலும் ஒருமாதகாலமாக மழைநீர் தேங்கிநிற்கின்றது. இந்நீரில் பாம்புகள் பல காணப்படுவதாகவும் இவ்வழுக்கு நீர் மூலம் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் பீதியடைகின்றனர்.
எனவே, இவ்வீதியில் தேங்கிக்கிடக்கின்ற நீரை வடிந்தோடுவதற்கும், வீதியின் நடுவே அமைந்திருக்கின்ற மின்கம்பத்தினை அகற்றுவதற்கும், இடைநிறுத்தப்பட்டிருக்கும் வீதி நிர்மாண வேலைகளை நிறைவுசெய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர்.



0 comments :
Post a Comment