பொருளாதார கொள்கைக்கு அவசரகால சட்டம் அவசியமா..?



லங்கை நாடு மிக கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் இலங்கையின் ஜனநாயகத்தை பல்வேறு வழிகளிலும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இந்த அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டால் இலங்கைக்கான சர்வதேச உதவிகள் கேள்விக்குட்படுத்தப்படும். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் அவசரகால சட்டம் வேண்டுமா என்ற சிந்தனை நிச்சயம் அவசியமானது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய, தனது கட்சி பா.உறுப்பினர்களை கொண்டு நிறைவேற்ற முடியாமல் பின்வாங்கிய அவசரகால சட்டத்தை, ரணில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி காட்டியுள்ளார். இதுவே ரணிலின் ஆளுமை. இது எதிரியின் கோட்டைக்குள் புரியாணி சமைத்து உண்ணுவது போன்றதாகும். இந்த அவசரகால சட்டம் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளமையானது ரணிலின் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அவசர கால சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் கூறிய செய்தியொன்று ஊடகங்களில் வெளிவந்திருந்தது. " பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தும் போது அவசரகால சட்டம் தேவைப்படும் " என்பதுவே அதுவாகும். பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தும் போது, எதற்கு அவசர கால சட்டம்?

அவசர கால சட்டம் மக்களை மிக கடுமையாக அடக்கும் வல்லமை வாய்ந்த ஒரு சட்டம். ஜனாதிபதி, தான் நினைத்த சட்டத்தை அமுல்படுத்த முடியும். இதில் தற்போது தற்காலிக சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை. மக்களை அடக்க வேண்டிய தேவை உள்ளதா என சிந்திக்கும் போது அதற்கான தேவை எதிர்காலத்தில் உள்ளதை எம்மால் ஊகிக்க முடிகிறது.

தற்போதும் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கோசங்கள் சில எழுந்துள்ளன . இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களது தற்போதைய மனநிலை, ரணில் ஏதாவது செய்யட்டும் என்ற எதிர்பார்ப்பாகவே உள்ளது. இதனால் போராட்ட கோசங்கள் நலிவுற்றுள்ளன என்பதே உண்மை. தற்போதைய கோசங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லையென்பதால் கடந்த காலங்களில் நிகழ்ந்ததை போன்ற பாரிய வன்முறைக்கான சாத்தியம் தற்போது மிக குறைவு எனலாம். தற்போது எழும் கோசங்களை அவசரகால சட்டம் கொண்டு அடக்க வேண்டிய தேவையில்லை. இன்று அழைப்புவிடுக்கப்பட்ட எதிர்ப்பை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்பது இதற்கான பெரும் சான்றெனலாம். ஜனாதிபதி ரணிலும் இதனை அடக்க அவசர கால சட்டம் தேவை என குறிப்பிடவில்லை தானே!

பொருளாதார கொள்கையை அமுல்படுத்தும் போது அவசரகால சட்டம் அவசியம் என்பதானது, எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகள் மக்கள் கிளர்ந்தெழும் வகையில் அமைந்திருக்கும் என்பதை எமக்கு தெளிவு செய்கிறது. முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மறுத்திருந்த போதிலும் IMF ஆனது 40 அரச நிறுவங்களை தனியார் மயப்படுத்த கூறியுள்ளதான செய்திகள் உள்ளன. இது நிகழ்ந்தால் இந் 40 அரச நிறுவன ஊழியர்களினதும் எதிர்வினையாற்றுகை எவ்வாறிருக்கும்? தற்போது மின்சாரம் மற்றும் நீருக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. மின்சாரம் 75 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை மக்கள் சாதாரணமாக கடக்க போவதில்லை.

மேலுள்ளவற்றை விட கடுமையான பொருளாதார கொள்கைகள் எதிர்காலத்தில் அமுல்படுத்த நேரிடலாம் என்பதையே ஜனாதிபதியின் அவசரகால சட்டம் அவசியம் பற்றிய கூற்று எமக்கு தெளிவு செய்கிறது. இப்போதைய பொருளாதார சிக்கலையே மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இது இன்னும் அதிகரித்தால், இதனை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. இறைவன் எமது நாட்டுக்கு ஒரு சிறந்த வழியை காட்டுவானாக

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :