கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்!



வியாழ காட்டாற்று வெள்ள அனர்த்த த்திற்கான காரணங்கள் என்ன?
பாதயாத்திரீகர்களின் அனுபவப் பகிர்வு.

ரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழாவை ஒட்டிய பாதயாத்திரை இம்முறை பலத்த சோதனைகளுக்கு உள்ளாகி இருந்தது. அது மட்டுமல்ல இந்த பாதயாத்திரை அதன் புனிதத்துவத்தை இழந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு பல அசாதாரண சம்பவங்களும், அனர்த்தங்களும் இடம்பெற்றிருக்கின்றன .

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை கடந்த மாதம் 22 ஆம் திகதி குமண சரணாலய நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்டது. இது (5) வெள்ளிக்கிழமை பூட்டப்பட்டது. இது வரை சுமார் 30 ஆயிரம் அடியார்கள் காட்டுக்குள் பிரவேசித்து பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என தெரிகிறது.

இப் பாதயாத்திரை முறையாக சீரமைக்கப்பட வேண்டும். புனிதத்துவமாக
மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதன் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடுகள் பேணப்பட வேண்டும் என்று அடியார்கள் பலர் ஆணித்தரமாக கருத்து தெரிவித்தார்கள்.
இந்த பாதயாத்திரை, குமண ,யால ஆகிய பாரிய பறவைகள் ,மிருகங்கள் வாழ்கின்ற சரணாலயங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுவது தெரிந்ததே.

இம்முறை, வரலாற்றில் என்றும் இல்லாத அளவிலே யால சரணாலய பகுதியில் உள்ள வியாழ ஆற்றிலே திடீரென ஐந்து அடிக்கு காட்டாற்று வெள்ளம் வந்து பெரும் அனர்த்தத்தை அடியார்களுக்கு ஏற்படுத்தியது .

இது ஒரு தற்செயலான செயல் அல்ல. இது முருகனின் சோதனை. புனித பயணத்தை மாசுபடுத்துபவர்களுக்கு கற்பித்த பாடம் என்றெல்லாம் பல அடியார்களும் பல கருத்துக்களை கூறினார்கள்.

தற்பொழுது ஆடிவேல் திருவிழா இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்த பாதயாத்திரை தொடர்பான அனுபவப் பகிர்வுகளையும் கருத்துகளையும் இங்கு பதிவிடுகின்றோம்.

கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் (தவிசாளர், காரைதீவு) கூறுகையில்...
இந்துக்களின் அடையாளமான கதிர்காம பாதயாத்திரையை புனித யாத்திரையாக வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும். ஏனைய சமய யாத்திரை மற்றும் விரதங்கள் போன்று அரசாங்கத்தினால் இதற்கான அத்தனை சலுகைகளும் வழங்கப்படவேண்டும். அது மாத்திரம் அல்ல பாதயாத்திரை செல்வோரின் வயது கட்டுப்பாடுகள் நடைமுறை விதிகள் என்பன முறைப்படி கட்டமைக்கப்பட வேண்டும். இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.இம்முறை வியாழையில் நடைபெற்ற அனர்த்தம் என்பது முருகப்பெருமானின் சோதனை.

முறையற்ற ரீதியில் வழமைக்கு மாறாக பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. வியாழ ஆற்றிலே திடீரென காட்டாற்று வெள்ளம். மூன்று பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தமை. நற்பிட்டிமுனை பெண் அடியார் மரணித்தமை. சில இளைஞர்கள் யுவதிகள் பாதயாத்திரைக்கு பொருத்தமில்லாத உடையணிந்து விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டமை. சீட்டு விளையாடி பைலா அடித்தமை. ஒரிரு மாதக்குழந்தைகளுடன் பயணித்தமை. சகோதர இனத்தவர் பலர் நீளக்காற்சட்டை கோட்சூட் அணிந்து சூஸ் கண்ணாடி அணிந்து சுற்றுலா செல்லும் பாணியில் வந்தமை. இவ்வாறு பலவற்றை குறிப்பிடலாம்.

இவைகளுக்கு பாடம் புகட்டும் முகமாக இந்த அனர்த்தம் மற்றும் தொடர் மழை இடம்பெற்று இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இனிவரும் காலங்களில் ஆசார பூர்வமாக பக்தி முக்தியாக புனிதமாக கட்டுக் கோப்பாக நடைபெற வேண்டும் என்றார்.

சித்தர்களின் குரல் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி( மட்டக்களப்பு) கூறுகையில்...

இம்முறை பாதயாத்திரையில் சென்ற போது நான் கண்ட அசாதாரண விடயங்கள் பலத்த வேதனை தந்தன. குறிப்பாக வியாழை ஆற்றிலே மக்கள் சந்தோஷமாக பொழுதை கழிப்பது வழமை. இம் முறை அதற்கான வாய்ப்பை முருக பெருமான் வழங்கவில்லை .அதற்கு காரணம் முறையற்ற யாத்திரை. இது புனிதமாக்கப்பட வேண்டும் என்பதுதான்
அடியேனின் அவா.
கே .இரத்னேஸ்வரன் (ஆசிரிய ஆலோசகர், வீரமுனை) கூறுகையில் ...
நான் பதினாறாவது வருடமாக பாதயாத்திரை செல்கிறேன். இம்
முறை ஏற்பட்ட சோதனையும் வேதனையும் ஒரு தடவையாவது ஏற்படவில்லை .
அந்த அளவுக்கு கடும் வெயில் பயங்கர மழை கடும் வெள்ளம் நடக்க முடியாத அளவுக்கு சேறும் சகதியும். நிற்க தரிக்க படுக்க முடியாத ஈரநிலம். நிம்மதியாக தேனீர் வைத்து குடிக்க முடியாது .விறகு பெற முடியாமல் தத்தளித்த நிலைமையெல்லாம் இடம் பெற்றன. கடந்த 16 வருடங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் பாதயாத்திரை செல்லும்போது விடுதிகளில் தங்க வில்லை. ஆனால் இம்முறை வீரச்சோலையிலும் கதிர்காமத்திலும் விடுதி வாடகைக்கு எடுத்து தங்க வேண்டிய ஏற்பட்டது.
நாங்கள் கடந்த காலத்தில் வியாழ ஆற்றிலே மனம் விரும்பி சந்தோஷமாக காலத்தை கழிப்பது வழமை .ஆனால் இம்முறை அந்த இடத்திலேயே நிற்க முடியவில்லை .அந்த கங்கையில் நீராடி மணலில் ஆடிப்பாடி மகிழ்வதும் தனி சுகம். அந்த மணலில் படுத்து உறங்கும்போது இருக்கின்ற சுகம் எதிலும் இருக்க மாட்டாது. ஆனால் இந்த வாய்ப்பு முறை கிடைக்கவில்லை எனவே இந்த பாதயாத்திரை பத்தி மொக்கையாக ஆதாரப்பூர்வமாக நடக்க வேண்டும் என்பதை அந்த வியாழன் அனைத்தும் எடுத்து சொல்லி இருக்கின்றது அது மாத்திரம் அல்ல இஸ்லாமியர்களுக்கு பௌத்தர்களுக்கு புனித யாத்திரையின் பொழுது லீவு வழங்கப்படுகின்றது ஏனைய சலுகைகள் வழங்கப்படுகின்றது அது போன்று இந்துக்களுக்கு புனித பாதயாத்திரை களும் செய்து அரசு ஊழியர்களுக்கு லீவு வழங்குவதோடு ஏனைய மக்களுக்கு ஏனைய சலுகைகளையும் வழங்க வேண்டும்.

கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (நாகர்கோயில் யாழ்ப்பாணம்) கூறுகையில்..
நான் 1969ல் எனது அப்பா உடன் 13 வயதில் நடந்து கதிராகாமத்திலே ராமகிருஷ்ண மிஷன் மடத்தில் இருந்தேன்.அக்காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மறக்கமுடியாது. அதன் பிற்பாடு நான் தனியாக வருகின்ற வருடம் இம்முறை எட்டாவது வருடமாகும்.கதிர்காமத்தில் இராமகிருஷ்ண மடம் எப்பொழுது கைவிடப்பட்டதோ அன்றில் இருந்து எனது வேதனை அதிகமாகியது.

ஆனால் இம்முறை எமது பாதையாத்திரை வரும்போது மட்டக்களப்பு கல்லடியில் உள்ள ராமகிருஷ்ணமடத்தை தரிசித்தது பெரும் சந்தோஷமாக இருந்தது. கதிர்காமத்தில் இருந்த அதே பகவான் இராமகிருஷ்ண சிலைகள் அங்கிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பற்றிக்ஸ் சாமி முதல் வேல்சாமி வரை பாதயாத்திரை வந்த அனுபவம் இருக்கின்றது.
முருகப்பெருமான் பல அற்புதங்களை காட்டி இருக்கின்றார். கதிர்காமத்தில் மீண்டும் இராமகிருஷ்ண மடம் அமைய வேண்டும். என்றார்.

தளபதி சுப்பிரமணியம்( வெற்றிலைக்கேணி) நான் கடல் தொழில் செய்து வருகிறேன் .இது தான் முதல் தடவை. எனது வருத்தம் குறைய வேண்டும் என்று பாதையாத்திரை ஆரம்பித்தேன் இடை நடுவிலே அது குறைந்துவிட்டது. முருகப்பெருமானின் அருள் கிடைத்துவிட்டது.

சிங்கராசா ஜெயராசா( யாழ்ப்பாணம்) கூறுகையில்..
நான் ஏழாவது வருடமாக பாதயாத்திரை செல்கிறேன். சன்னதி ஆலயத்திலிருந்து இம் முறை தலைமை தாங்கி நடத்தி வந்த சந்தோசமும் இருக்கின்றது. எனது அண்ணன் கனடாவில் இருக்கின்றார் அவரது மூன்றாவது புதல்வன் நடக்க முடியாமல் இருந்தார். அவர் நடக்க வேண்டும் என்று நேர்த்தி வைத்து நான் நடந்து வந்தேன். இப்பொழுது அவர் நடக்க ஆரம்பித்து விட்டார். அதன் காரணமாக எனது அண்ணனும் இம் முறை பாதையாத்திரை கலந்து கொண்டார். இந்த பாதயாத்திரை மேலும் புனிதமாக்கப்பட வேண்டும் என்பது எனது அவா என்றார்.
ச.சபாரெத்தினம்( வெற்றிலை கேணி) நான் எட்டாவது வருடம் என்ற பாதயாத்திரை வருகிறேன்.முருகன் அருளால் அனைத்து கிடைத்தது.

கணேசராஜா விதுர்ஷன்( பொறியியலாளர், காரைதீவு) கூறுகையில்..
நான் இம் முறைதான் கன்னிப் பயணத்தை மேற்கொண்டேன். மிகவும் கஷ்டமான பயணமாக இருந்தாலும் வழிநெடுகிலும் கண்டு அனுபவித்தவைகள் மனதிற்கு சுகமாக இருக்கிறது. இதமாக இருந்தது. வழியில் அடைமழை. சமைக்க முடியாது.நிம்மதியாக உறங்க முடியவில்லை.நடக்க முடியாத அளவுக்கு சேறும் சகதியும்.குடிப்பதற்கு நீர் இல்லை.மழைநீரை வடித்து சூடாக்கி அருந்தினோம். வியாழ ஆற்றிலே தரிக்காமல் நேராக வள்ளி அம்மன் ஆற்றிற்கு சென்றோம். அனைத்தும் முருகன் செயல் என்று கருதி வைராக்கியத்துடன் நடந்தோம். இன்றும் அது ஒரு சுகானுபவமே. என்றார்.

ச.நந்தபால( கற்கோவளம்) கூறுகையில்..
இது ஏழாவது வருட யாத்திரை. வியாழ காட்டாற்று வெள்ளம் ஒரு படிப்பினை. இவ் யாத்திரை புனிதமாக்கப் படவேண்டும் என்றார்.

வேலுப்பிள்ளை தர்மகுலசிங்கம்( வடமராட்சி கிழக்கு தாளையடி) கூறுகையில்..
நான் ஆறாவது வருடமாக வருகின்றேன் .எனது பிள்ளைக்கு புற்று நோய் கட்டி ஏற்பட்டிருந்தது .நெஞ்சு பகுதியிலே 16 கட்டிகள் மந்திகையில் அகற்றப்பட்டது. சுவாசப் பைக்கு கீழ் இன்னும் மூன்று கட்டிகள் இருக்கின்றன அதனை அகற்றமுடியாது என்று மந்திகையில் டாக்டர்கள் தெரிவித்தனர். கொழும்புக்கு சென்று அதனை செய்வதற்கு எமக்கு வசதி இல்லை. நான் முருகப்பெருமானை நினைத்து மிளகு தண்ணி குடித்து விரதம் பிடித்து நடந்து வந்தேன். இடையிலேயே கால் வெடித்து இரத்தம் எல்லாம் கசிந்தது. ஆனால் நான் தளரவில்லை . இன்று அந்த கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதே. முருகனின் அருள் கிடைத்து விட்டது.

முத்துலிங்கம் காண்டீபன் ( காரைதீவு)
கூறுகையில்..
பாரம்பரிய பாதயாத்திரை வரலாற்றில் வியாழயில் இப்படி நடந்தது இதுவே முதல் தடவையாகும்.விடிய விடிய மழை பொழிந்து கொண்டிருந்தது.
காட்டாற்று வெள்ளத்தால் திடீரென வியாழை ஆற்றின் நீர் மட்டம் 5 அடி வரை உயர்வடைந்தது.இதனால் அடியார்கள் திக்குமுக்காட அரோகரா கோசம் விண்ணைப்பிளந்தது.
அடியார்கள் உயிரைக் கையில் பிடித்தபடி காட்டுக்குள் ஓடினர்.
ஆனால் அவர்களது உடைமைகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
அவர்களது உடுப்பு பைகள் செருப்புகள் உணவுப் பொதிகள் ரார்போலின் அனைத்தும் வெள்ளத்தில் அள்ளுண்டன.

நான் எனது பிள்ளைகளை வெள்ளத்தில் பொறுக்கி எடுத்தேன். ஆனால் அரிசி மரக்கறி உணவு பைகளை காப்பாற்ற முடியவில்லை. வெள்ளத்தில் அள்ளுண்டன.அருகில் உள்ள வள்ளி அம்மன் ஆற்றில் நின்ற அடியார்களுக்கு இராணுவம் முன்னதாக அறிவித்தது.
ஆனால் 3 ஆயிரம் அடியார்கள் தங்கியிருந்த வியாழையில் எந்த அறிவித்தலும் இல்லை. அதுவே நள்ளிரவு அவலத்திற்கு காரணம். பாதயாத்திரை மறுசீரமைக்க படவேண்டும். என்றார்.

ரி.சரஸ்வதி (சில்லாலை.பண்டத்தரிப்பு) கூறுகையில் ..
நான் கனவிலும் நினைக்கவில்லை இப்படி ஒரு பயணம் அமையும் என்று. கடந்த நான்கு வருட காலமாக பஸ்ஸில் பயணம் சென்று வந்தேன்.2014 முதல் யாத்திரையாக சென்று வருகிறேன்.ஆறு பிள்ளைகளின் தாயான நான் முருகன் அருளால் சந்தோஷமாக இருக்கின்றேன். புனித பாதயாத்திரை புனிதமாக அமைய வேண்டும். என்றார்.

நடராசா ரத்னசிங்கம் )மாமுலை வடமராட்சி) கூறுகையில்..
2013 முதல் பயணத்தை மேற்கொண்டேன். வழியிலே முருகப்பெருமான் காட்சி தந்தார். இம்முறை வேலோடு மலைக்கு செல்ல முடியாமல் சித்தாண்டிலேயே தரித்து நின்ற பொழுது எனக்கு அங்கு வேலோடு முருகன் கனவிலே காட்சி தந்தார். உண்மையிலே இதனை மறக்க முடியாது என்றார்.

பிஜெகதீஸ்வரன்( திருகோணமலை) கூறுகையில்...

இம் முறை வியாழ ஆற்றிலே இடம்பெற்ற அனர்த்தம் சாதாரணமானதல்ல. சிலர் வேலை தூக்கிக்கொண்டு பொய் பேசி ஏமாற்றி வருகின்றார்கள். சன்னதியில் இருந்து வருகிற வேல் மாத்திரம் தான் உண்மையானது. ஏனைய வேல்களுக்கு அவர்கள் அபிஷேகம் செய்வதில்லை. சிலர் செருப்போடு டவுசரோடு ஆசாரம் இல்லாமல் வேல் தாங்கி வருகிறார்கள் .10 வருடம் 15 வருடம் எனப் பொய் சொல்கிறார்கள். இப்படி பாவத்தோடு வருகின்ற காரணத்தால் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றதுஇனிமேலாவது வேல் தாங்குபவர்கள் புனிதமாக பயணிக்க வேண்டும். என்றார்.

மொத்தத்தில் கதிர்காம பாதயாத்திரை புதிய பரிமாணத்துடன் வர்த்தமானி பிரகடனம் செய்து புனிதமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அனைவரதும் அவா.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
பாதயாத்திரீகர்
காரைதீவு


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :