5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் அதிக வலயங்களின் பின்னடைவே கிழக்கு மாகாணப் பின்னடைவுக்கு காரணம்.



எப்.முபாரக்-
5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் அதிக வலயங்களின் பின்னடைவே கிழக்கு மாகாணப் பின்னடைவுக்கு காரணம் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முகம்மது முஸ்இல் தெரிவித்தார்.

ஏம்.எஸ்.முகம்மது கைஸ் ஆசிரியர் எழுதிய ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான தமிழ் மொழி – அடிப்படை மொழிப் பயிற்சி நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை(21) மாலை கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் 99 கல்வி வலயங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் 70 புள்ளிகளுக்கு அதிகம் பெற்ற வலயங்களின் பட்டியலில் கிழக்கு மாகாணத்தின் 11 வலயங்கள் 80ஆம் நிலைக்கு பின்னாலேயே இருக்கின்றன. கிழக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வருவதற்கு இதுவே காரணம்.

கல்வி வலயங்களின் பெறுபேற்று வீதங்கள் அதிகரித்திருந்தாலும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் பகுப்பாய்வு பட்டியலில் கிழக்கு மாகாண வலயங்கள் முன்னிலைக்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் ஏனைய வலயங்களின் வளர்ச்சி கிழக்கு மாகாண கல்வி வலயங்களின் வளர்ச்சியை விட அதிகமாகும்.
கிழக்கு மாகாண சபைக்கு வருடாந்தம் கிடைக்கும் மொத்த நிதியில் சுமார் 50 வீதம் கல்விக்காக செலவிடப்படுகின்றது. இது சுமார் 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஆகும். இதனை விட கொழும்பு கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, பொதுக்கல்வியை நவீனப்படுத்தல் போன்ற திட்டங்கள் மூலம் அதிக நிதி செலவிடப்படுகின்றது.

இதற்கப்பால் யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வருடாந்தம் அதிக நிதியை கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்துக்காக செலவிடுகின்றன. எனினும், தேசிய மட்ட தரப்படுத்தலோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தால் முன்னேற்றம் காண முடியவில்லை.
கிண்ணியா கல்வி வலயத்தில் ஒரு பாடசாலையில் இருந்து 1 மாணவர் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். அவர் 70 புள்ளிகளை விடக் குறையவே பெற்றுள்ளார். அதேபோல இன்னுமொரு பாடசாலையில் 2 மாணவர்கள் தோற்றி இருவரும் 70க்கு குறையவே புள்ளி பெற்றுள்ளனர்.
5 வருடங்களாக ஒரு மாணவனுக்கும், இரு மாணவர்களுக்கும் கற்பித்து குறைந்த பட்சம் 70 புள்ளிகளையாவது பெற வழிகாட்டப்படவில்லையென்றால் எங்கே குறைபாடு உள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
இவை போன்ற விடயங்களில் கல்விப் புலத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். நாம் எங்கே தவறு விடுகின்றோம் என்பதை இனங்காண வேண்டும். அவற்றுக்குரிய பரிகாரங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தை முன்னேற்ற முடியும்.
இங்கு வெளியிடப்பட்ட தமிழ்மொழி - அடிப்படை மொழிப் பயிற்சி நூல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்கள் சிறந்த பலனைப் பெற முடியும்.
இது போன்ற நூல்கள் வெளியிடுதல், மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல் போன்றன ஆசிரியர்களது வாண்மை விருத்திக்கு துணை செய்யும். அவர்களது ஆற்றலை வலுப்படுத்தும். இவ்வாறான ஆசிரியர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :