வளமான தேசத்தை கட்டியெழுப்புவதில் பட்டதாரிகளின் பங்களிப்பு

“வ
ளமான மக்களால் பூரணித்த வளமான தேசம்” என்ற வாசகம், ஏனோ ஓர் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை சிந்தனையில் தோற்றுவிக்கின்றது. 

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த இருபத்தியொராம் நூற்றாண்டு நிலம், நீர், காற்று என்பதை தாண்டி இலத்திரனியல், தொழில்நுட்பம் என செயற்கை அணிந்து கொண்டிருக்கின்றது. இவற்றிற்குள் நாம் பசுமையையும், செழிப்பையும், இயற்கையையும் மட்டும் நம்பி நிற்பதை விட மாறிவரும் சூழலுக்குள் நிகழும் மாற்றங்களை ஏற்று புதியவற்றை உருவாக்கினாலேயொழிய அபிவிருத்தியை எட்டிவிட முடியாது. 

செயற்கை பூண்ட வளமான தேசத்தை கட்டியெழுப்புவதென்பது இலங்கை போன்ற அபிவிருத்திடைந்துவரும் நாடுகளுக்கு கல்லில் நாருரிப்பது போன்றது தான். அன்றாடம் எழுகின்ற புதிய புதிய பிரச்சனைகள், புதிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய புதிய முறைமைகள் என்பவற்றை எதிர்கொள்ள அதற்கேயுரிய துறைகளில் பாண்டித்தியம் பெற்ற புலமை வாய்ந்தவர்களின் பங்களிப்பென்பது மிக முக்கியமானது என்ற அடிப்படையில்; துறைசார் கல்வியில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள் இன்று வளமான தேசத்தை கட்டியெழுப்புவதில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டனர்.

இலங்கையினுடைய பல்கலைகழக கல்வித்திட்டமானது பரவலாக அனைத்து துறைசார் பாடநெறிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டடுள்ளதோடு ஒரு நாட்டை தரமானதாக கட்டியெழுப்ப தேவையான பட்டதாரிகளை உருவாக்கக்கூடியவாறான பட்டங்களையும் வழங்குகின்றது. ஆனால் பட்டப்படிப்பின் பின்னர் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தக்கூடியவாறான வேலைவாய்ப்புகளும் சந்தர்ப்பங்களுமே இன்னும் முறைப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருந்துவருகின்றன. 

இவற்றிற்கான தேவை உணரப்பட்ட போதும்; பொருளியல் மற்றும் நிர்வாக நடைமுறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் நாட்டினுடைய அபிவிருத்தியில் பட்டதாரிகளின் மூலமான உச்சப்பயனை பெற்றுக்கொள்வதில் பிற்போக்கான நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு நாட்டில் வளமான எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய பிரதான வகிபாகங்களான சமூக பொருளாதார மற்றும் அரசியல் துறைகளிலேயே, எமது பட்டதாரிகளின் பங்களிப்பு அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக துறையை நோக்கினால் பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம், கல்வி, நல்லிணக்கம் போன்ற குடிமக்களின் தன்னிறைவான வாழ்விற்கு அவசியமான அடிப்படை வசதிகள், அபிவிருத்தி திட்டங்கள் என்பன கருத்தில் கொள்ளப்படவேண்டியனவாக காணப்படுகின்றன.

பட்டதாரிகளிடம் சமூகம் சார்ந்த கண்ணோட்டமும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சியும் காணப்படும் போது எம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் வளமான வாழ்க்கையை அடைவதோடு தேசமும் வளமான எதிர்காலத்தை நோக்கி நகரும். பட்டதாரிகள் என்ற வகையிலும் மருத்துவர்கள் என்ற வகையிலும் வைத்தியர்களின் பங்களிப்பு மேலும் மேலும் எமது சமூகத்திற்கு தேவையுடைய ஒன்றாக இருந்துவருகின்றது.

 அதேவேளை ஆசிரியர்களின் பங்களிப்பானது; ஒட்டுமொத்த இளைய தலைமுறையின் எதிர்காலத்திலும் அதன் மேல் கட்டியெழுப்பப்படும் தேசத்தின் எதிர்காலத்திலும் மற்றும் சமூக நல்லிணக்கம், கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை தரமானதாக மாற்றியமைப்பதிலும் பொறுப்புணர்வோடு செயற்படுவதில் தங்கியுள்ளது.

ஒரு நாட்டினது அபிவிருத்தியில் நேரடிப்பங்கு வகிப்பது அதனுடைய பொருளாதார துறையாகும். வருமான மற்றும் செலவு வழிகள், அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி, வரி விதிப்புகள் என நாட்டினது முழுமையான தேவைகளும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றன. 

பொருளியல், நிதி மற்றும் இவற்றோடு தொடர்புடைய பட்டதாரிகள் எமது நாட்டினுடைய சூழ்நிலைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் பொருந்தக்கூடிய வகையிலான பொருளாதார செயற்றிட்டங்களை உருவாக்கி தனிமனித வருமானமட்டத்தை உயர்த்துவதிலும், இலங்கையை அபிவிருத்தியடைந்த செல்வந்த நாடு என்ற நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய உபாயங்களை வகுத்தும்; எம் தேசத்தை வளமான நாடாக மாற்றுவதற்கு பங்களிக்க வேண்டும். 

இன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடிச்செல்பவர்களில் அதிகமானோர் தொழில்நுட்பம் மற்றும் நிதி துறைகளை சார்ந்தோராகவே காணப்படுகின்றனர். 

இது “பிரைன் ட்ரைன்”; எனப்படுகின்ற நாடுகளுக்கிடையிலான அறிவு மற்றும் ஆளுமையுள்ள தனிநபர்களின் குடிபெயர்வு மற்றும் குடியகழ்வை குறிக்கின்றது. இதனால் இலங்கையில் கல்விபயின்று பட்டம்பெற்றவர்களின்; அறிவும் திறனும் வேறொரு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது. இதற்கு மாற்றமாக பட்டதாரிகள் வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களையும், நவீன முறைமைகளையும் இலங்கைக்குள் எடுத்துவரக்கூடியவர்களாக செயல்பட வேண்டும். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்திருக்கச்செய்யக்கூடிய தூரநோக்கிலான சிந்தனையுடனும் செயல்பட வேண்டும்.

எமது நாட்டு நிலவரங்களை அறிவுக்கண்கொண்டு பார்ப்போர்க்கு தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியவொன்று தான், அரசியலில் பட்டதாரிகளின் பங்களிப்பின் அவசியம். படிக்காதவர்களினால் பாராளுமன்றம் படும் பாடு நாடே அறிந்த நிதர்சனம். நிர்வாக நடவடிக்கையானாலும் சரி, பாதுகாப்பு மற்றும் சிவில் சேவையாயினும் சரி மக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வைபெற்றுத்தருவதில் சில குறைபாடுகள் இருந்துகொண்டே வருகின்றன. 

எனவே பட்டதாரிகள் பிரதானமாக சட்டம் மற்றும் நிர்வாகம் பயின்ற பட்டதாரிகள் அரசியல், நிர்வாக துறையில் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் நுட்பமான கோட்பாடுகளை வடிவமைக்கவும், தற்போதைய நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை மறுசீரமைக்கவும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். 

அதுமட்டுமன்றி வெறுமனே வேடிக்கை பார்க்கும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல் வளமான தேசத்தின் நிலையான எழுச்சிக்காய் சரியான இடத்தில் மாற்றங்களுக்காய் குரல் கொடுக்கும் பொறுப்புள்ள ஓர் பட்டதாரியாகவும் செயல்பட வேண்டும். 

இதுவே அறிவுள்ள ஓர் சமூகத்தின் நிலைத்திருப்பை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தும்.
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையும் வேலைவாய்ப்பின்மையும் எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான முட்டுக்கட்டையாhக காணப்படுகின்றன.

எனவே அரசாங்கம் வேலை வழங்கும் வரை காத்திராது சுயமாக வேலைகளை உருவாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்யும் முயற்சியாளர்களாக பட்டதாரிகள் மாறவேண்டும். எமது நாட்டின் வளங்களை உச்சமாக பயன்படுத்தவும், அவற்றினூடே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், எதிர்கால சமூகம் பயன்பெறும் வகையில் நிலைத்துநிற்கக்கூடிய அபிவிருத்தியை பேணவும்; தமது அறிவு, ஆற்றல், ஆளுமைகளை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியவர்களாகவும் பட்டதாரிகள் மாறவேண்டும்.

குறை கூறுவது இலகு, அவற்றிற்கான தீர்வை கண்டுபிடிப்பதே சவால். எனவே கல்வியெனும் கருவியை கையில் ஏந்திய பட்டதாரிகள் எம் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் அடுத்த தலைமுறைக்கு முன்னோடிகளாகவும், வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பவர்களாகவும், பொறுப்புள்ள குடிமகன்களாகவும் செயல்பட்டு எமது நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொண்டுவருவதிலும், புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இலங்கை தேசத்தின் எழுச்சியில் ஓர் இலங்கை பட்டதாரியாக தன் கடமையுணர்ந்து பணியாற்றவேண்டும்.

"வழித்தடம்" - அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்
ஆர்.எப்.ரப்அத்
கொழும்பு பல்கலைகம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :