20' தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே எமது முடிவை அறிவிப்போம் - இராதாகிருஷ்ணன் எம்.பி


க.கிஷாந்தன்-

" அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே '20' தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் எமது முடிவை அறிவிப்போம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் 28.09.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு ஹர்த்தால், 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆகியன தொடர்பில் அவர் கூறியதாவது,

" வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காணொளி மூல கலந்துரையாடல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மோடியின் அறிவிப்பை நாமும் வரவேற்கின்றோம்.

13 விடயத்தில் மோடி அறிவுறுத்தல் வழங்கலாம், ஆனால் அழுத்தம் கொடுக்கமுடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் 13 பற்றி பேசப்பட்டுள்ளது. எனவே, சில அமைச்சர்கள் இல்லை என கூறுவதை ஏற்கமுடியாது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் இன்னும் எமது முழுமையான அறிவித்தலை வழங்கவில்லை. எதுஎப்படியிருந்தாலும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராயவேண்டும். 19 ஊடாக நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது.அதனை நாம் ஆதரித்திருந்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இருந்த மோதலால் சிக்கல்கள் உருவானதே தவிர 19 ஆவது திருத்தச்சட்டத்தை குறைகூற முடியாது.

கணக்காய்வு ஆணைக்குழு ஒழிப்பு, பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு பின் கலைத்தல் உட்பட 20 இல் ஏற்றுக்கொள்ளமுடியாத சில விடயங்கள் உள்ளன. '20' இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் தாக்கல் செய்துள்ளதால் நாம் தனியாக மனுதாக்கல் செய்யவில்லை.

எனவே, உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் வெளிவந்த பின்னர், 20 இல் எவ்வாறான திருத்தங்கள் இடம்பெறவுள்ளன என்பது உட்பட சில விடயங்களை கருத்திற்கொண்டு எமது முடிவு அறிவிக்கப்படும்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :