அமைச்சர் நிமல் சிறிபாலவை பைஸர் முஸ்தபா தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் குழு சந்திப்பு


மினுவாங்கொடை நிருபர்-
முஸ்லிம்களின் ஜனாஸா (மரண) விவகாரம் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் குழுவினர், (08) புதன்கிழமையன்று, நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவை, அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஒரு முஸ்லிம் மரணித்தால், மிக அவசரமாக (24 மணித்தியாலத்திற்குள்) அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது, இஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஒன்றாகும். இந்நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அவசரமாக வைத்தியசாலைகளிலிருந்து எவ்விதத் தாமதங்களுமின்றி கையளிக்கப்படல் வேண்டும். முஸ்லிம் மையங்களை, வைத்திய சாலைகளில் மிக நீண்ட நேரம் வைக்காமல், அவை உறவினர்களிடம் அலைக்கழிக்கப்படாமல் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என, இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. உள்ளிட்ட குழுவினர், அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். இதனைக் கருத்தில் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் தான் கவனமெடுத்து செயற்படுவதாகவும், வைத்தியசாலை அதிகாரிகள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட அதனை நிர்வகிப்போர் அனைவருக்கும் இது குறித்து அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பற்றாக்குறை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நிலவுவதாகவும், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் இக்குழுவினர் வேண்டிக்கொண்டதோடு, இது குறித்த பட்டியல் ஒன்றையும் கையளித்தனர்.
இதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பில், அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி. யினால் இரு திருத்தங்கள், (08) புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமணக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் ஆகிய இரு திருத்தங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பிலும் அமைச்சர் நிமல் ல் சிறிபால டி. சில்வாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. உலமாக்கள், பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன, இந்த விவகாரம் சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பிலும் தான் ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதகமுமில்லாத தீர்மானம் ஒன்றை எடுப்பதாகவும், இது குறித்து தான் கவனமெடுத்துச் செயற்படுவதாகவும், பைஸர் முஸ்தபாவிடமும் முஸ்லிம் கவுன்ஸில் உறுப்பினர்களிடமும் உறுதிப்பாடளித்தார்.
இக்கலந்துரையாடலில், பைஸர் முஸ்தபா எம்.பி. கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் ஹாஜியார், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான், கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஒமர் காமில், வத்தளை - மாபோல நகர சபை முன்னாள் தலைவர் எம். நெளஷாத் உள்ளிட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -