தந்தை செய்த நன்றியை மதித்து மலாயர் சஜித்துக்கே வாக்களிப்பர்துனிய மலாய் துனிய இஸ்லாம் அமைப்பின் இலங்கைத் தலைவர் டாக்டர் அன்வர் உலுமுத்தீன்


எம்.எம்.எஸ். ஸாகிர்-
லங்கையிலுள்ள மலாய இனத்தை மதித்து மலாய இனத்தவர் ஒருவரை காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமித்து மலாயர் சமூகத்துக்கு கௌரவம் அளித்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கே எந்தவித பக்கச் சார்பும் இல்லாதிருந்த இலங்கை வாழ் மலாய இனத்தவர், முதன்முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக துனிய மலாய் துனிய இஸ்லாம் (DMDI) அமைப்பின் இலங்கைத் தலைவர் டாக்டர் அன்வர் உலுமுத்தீன் தெரிவித்தார்.

மலாய இனத்தவர்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சம்பந்தமாக கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் மலாய இனத்தவர் 80 ஆயிரம் பேர் தங்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனாலும் தற்போது மலாயர் இனத்தவர்கள் 90 ஆயிரத்துக்கும் ஓர் இலட்சத்துக்கும் இடையில் இலங்கை நாட்டில் வாழ்கின்றார்கள் எனக் கணிக்கலாம்.
அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி உடையவர்களாகக் காணப்படுகின்றனர். அந்த வாக்குகளை நாங்கள் இந்தமுறை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அளிப்பதற்கு இருக்கின்றோம். 70 வருடத்துக்குப் பிறகு இந்த முயற்சியை நாங்கள் செய்கின்றோம்.
நாங்கள் சஜித்தை ஆதரிப்பதற்கு ஒரே ஒரு காரணம், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ எங்களுக்கென்று ஓர் இடத்தைக் கொடுத்து, ஒரு எம்.பி.யைக் கொடுத்து, மலாயர் இனத்தவர்களைக் கௌரவப்படுத்தினார். அதே நேரத்தில் கொழும்பில் மலாயர் இனத்தவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்த ஒருவர். எனவே மலாய இனத்தவர்களுடைய உணர்வுகள், தேவைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் மலாய இனத்தவர்கள் இதுவரைக்கும் ஒன்றுமே கேட்டதில்லை. தங்களுக்கென்று ஒன்றும் கேட்காமலே சிங்கள மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்பவர்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
இன்றுள்ள நிலைமை ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் மலாய இனத்தவர்களாக இருந்து கொண்டு எங்களுக்கும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அதே தாக்கத்தைத்தான் உண்டாக்குகிறார்கள். அதனாலே நாங்களும் முஸ்லிம்கள் என்பதால் நாங்களும் முஸ்லிம்களோடு ஒன்று சேர்ந்து மற்ற இனத்தவர்களோடு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவைக் கொண்டு வந்தால் தான் எங்களுக்கும் பாதுகாப்பும், உத்தரவாதமும், அமைதியும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எங்களுக்கு பாதுகாப்பும் அமைதியும்தான் முக்கியம்.

நாங்கள் முக்கியமான ஒரு கோரிக்கையை மட்டும் சஜித் பிரேமதாஸவிடம் விடுக்க இருக்கின்றோம்.
இலங்கையின் முதல் ஆமி ரெஜிமன்டாக மலாயர் ஒருவர்தான்தான் இருந்தார். அவருக்குப் பிறகு நிறைய மலாய ரெஜிமன்ட்கள் சாதித்தார்கள். இலங்கைக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள். இன்றைக்கும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லத்தீப் வரையில் இலங்கை நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கி, முன்னணியில் திகழ்பவர்கள் மலாயர்கள்தான்.
அந்த அடிப்படையில் பழைய டீ.ஐ.ஜீமார் தற்போது இருக்கின்ற புதிய டீ.ஐ.ஜீ மார், பழைய எஸ்.எஸ்.பிமார், பிரிகேடியர்மார் என்று மலாயர்களை ஒரு குழுவாக ஒன்று சேர்த்து நாட்டுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக, பாதுகாப்பு விவகாரத்தில் ஓர் இடத்தை தருமாறு நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க இருக்கின்றோம். பாதுகாப்பு விடயத்தில் அப்படி ஓர் இடம் தந்தால் அதில் தொண்டராக வேலை செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதற்கு மலாயர் இனத்தவர் என்ற ரீதியில் எங்களால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து எங்களுக்குள் இருக்கின்ற 60ஆயிரம் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை நிச்சயமாக அவருக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
இதுவரை எங்கள் கணீப்பீட்டில் அம்பாந்தோட்டை, கொழும்பு ஆகிய இடங்களில் மலாயர் அடர்த்தியாகவும் மற்றும் ஊவா மாகாணம், பண்டாரவளை ஆகிய இடங்களிலும் நாட்டின் ஆங்காங்கு பல்வேறு இடங்களிலும் மலாயர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது பாதுகாப்பைக் கருதி, பிரிந்திருந்த மலாயர் இனத்தவர்கள் கூட ஒற்றுமைப்பட்டு, இம்முறை சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க, ஒட்டுமொத்த மலாயர் சமூகமும் முன்வந்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -