அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்


சுஐப்.எம்.காசிம்-
முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான இரண்டாவது தேர்தலை இந்நாடு சந்திக்க நேர்ந்ததும்,இதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 1988 ஆம் ஆண்டில் இணைந்த வட,கிழக்கு மாகாண சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டி யிட்டதும்,அஷ்ரஃபுக்கு அரசியலில் அதிஷ்டத்தை அள்ளிக்கொடுத்தது. இந்த அதிஷ்டம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடையாளத்தை தேசியளவில், அங்கீகரிப்பதற்கான ஆணையையும் கொடுத்தி ருந்தது.எட்டாக்கனியாகவும், நிறைவேறாக் கனவாகவுமிருந்த பாராளுமன்றப் பதவிகளை, பாமரன் முதல் படித்தவர் வரை பகிர்ந்தளிப்பதற்கு,ஏற்ற சந்தர்ப்பமாக 1988 ஆம் ஆண்டின் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்திய ஆளுமையும் மர்ஹூம் அஷ்ரஃப்தான்.பாராளுமன்றத் தேர்வு க்கான 12 சத வீத வெட்டுப்புள்ளியை 05 சத வீதமாகக் குறைக்கும் யோசனைக்கு, அமரர் பிரேமதாசாவை இணங்க வைத்த மர்ஹூம் அஷ்ரஃப், சிறுபான்மை சமூகத்தின் வாக்குப்பலத்தை,தேசிய அரசியலில் பயன்படுத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.அற்ப ஆதாயங்களுக்காக,இனத்தின் பெயரையும்,சமூக அடையாளத்தையும் பெரும் தேசியக் கட்சிகளில் அடகு வைப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்பதையும், தனித்துவ அரசியலூடாக நிரூபித்த ஆளுமையும் அஷ்ரஃப்தான்.
சகோதர சமூகத்தின் நியாயமான போராட்டங்களைத் திசை திருப்பிக் கொச்சைப்படுத்தும், பிரித்தாளும் தந்திரங்களூடாக மற்றுமொரு சிறுபான்மையைத் தூண்டி, வாக்குகளைப் பெறும் பேரின அரசியலுக்குள் சிக்காமலும் முஸ்லிம்களை விழிப்பூட்டிய அஷ்ரஃபின் பார்வைகளை, இன்றைய தலைமைகள் பட்டை தீட்டிப்பார்க்க வேண்டும். அஞ்சியும் வாழாது, கெஞ்சியும் போகாதிருக்க மர்ஹும் அஷ்ரஃப் தேசிய அரசியல் களங்களை நாடிபிடித்துப் பார்ப்பதில் தோற்றதில்லை.1989,1994 ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனாபதித் தேர்தல்களில், அஷ்ரஃப் வகுத்த வியூகங்கள்,சிறுபான்மைக்குள் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் பேரம் பேசும் பலத்தை பாதுகாத்திருந்தது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போரியல் சூழல்கள் தமிழர்களின் அரசியற்பங்களிப்பைக் குறைத்திருந்ததால், முஸ்லிம் காங்கிரஸுக்கு இந்தப் பலம் கிடைத்ததென்பதையும் மர்ஹூம் அஷ்ரஃப் அறிந் தேயிருந்தார்.இதற்காகப் பேரம் பேசும் அரசியலில்
இருந்து சகோதர தமிழ் சமூகம் ஒதுங்கியிருப்பதை யும் அஷ்ரஃப் விரும்பில்லை.
தமிழர்களையும் சேர்த்து சிறுபான்மைச் சமூகங்களின் ஒட்டு மொத்த வாக்குகளின் திரட்சியையும் தக்க வைத்து, ஒரணியில் சேர்த்து, பெரும்பான்மையிடம் பேரம் பேசும் வியூகமும் அவரிடமிருந்தது.இந்தப் பணியையே அவரது தேசிய ஐக்கிய முன்னணி (நு ஆ) செய்யவிருந்தது.சந்திரிக்கா அரசின் பங்காளிக் கட்சியாக இருந்ததால் இந்தக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குத் துணைபோய் சிறுபான்மை அழிப்புக்கு வித்திட்ட ஒரு தவறான பார்வையும் மர்ஹூம் அஷ்ரஃபுக்கிருந்தது. சில அரசியல்வாதிகளின் ஓரக் கண்பார்வைகளும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத மனவளர்ச்சி குன்றியோருமே இந்தப் பார்வையில் இருந்தனர்.

அமரர்களான சிவசிதம்பரம் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், உள்ளிட்ட மர்ஹூம் அஷ்ரஃப் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள்,வடக்கு,கிழக்கு சமூகங்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு பேரினவாதத்திலான திணித்தல் தீர்வும்,பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தீர்வும் அவசியமில்லை என்பதைக் காட்டியிருந்தன. மர்ஹும் அஷ்ரஃபின் தௌிவான நோக்குகள் மிதவாதப் போக்குள்ள தமிழ்,சிங்களத் தலைவர்களின் உறவுகளைப் பாதித்திருக்கவில்லை. மர்ஹூம் அஷ்ரஃபின்,அரசியல் வியூகங்கள் இன்றைய,என்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கும் இணங்கிச் செல்லுமா? என்ற கேள்விகளுக்கு இடம் வைத்ததுமில்லை.காலத்திற்கேற்ற வகையிலும் தென்னிலங்கை அரசியல் கள நிலவரங்களை நாடி பிடிப்பதிலும் மர்ஹும் அஷ்ரஃப் தோற்றிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு இடமிருந்திருக்கும்.
ஆனால் இன்று முஸ்லிம் தலைமைகளின் நிலைமைகள், சமூகத்துக்குப் பின்னாலும் அவர்களின் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டும் செல்ல வேண்டிய,பதற்றத் தையே ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைத்தளங்கள், நவீன தொடர்பாடல்களும் இவ்வாறான அரசியல் பதற்றங்கள் உருவாகக் காரணமாகின்றன. மர்ஹூம் அஷ்ரஃபின் காலத்தில் இவ்வாறான தொடர்பாடல்கள்,விழிப்புணர்வுகள் இருக்கவில்லை. இதனால் உணர்ச்சிவசப்படுவதிலிருந்து எமது சமூகம் தூரப்பட்டிருந்ததாகக் கருத முடியுமா? என்ற சிந்தனைகளும் உயிர்ப்படைகின்றன.இந்த உயிர்ப்படைதல்களிலிருந்து இன்றைய முஸ்லிம் தலைமைகள் விழிப்படைய வேண்டும். தென்னிலங்கை அரசியலை நாடி பிடிப்பது இன்று ஏற்பட்டுள்ள சூழலில் கடினமானதுதான்.இந்தக் கடினத்தில்தான் கவனம் தேவைப்படுகிறது.இது வரை அடையப்படாத முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை,அபிலாஷைகளை வெல்லச் சாத்தியமான தென்னிலங்கை தலைமையை அடையாளம் காணல்,பெரும்பான்மைவாதம்,கடும்போக்கு, தாராண்மைவாதமாக நடித்துக் கொண்டு சிறுபான்மையை ஏப்பமிடும் முதலாளித்துவவாதம் உள்ளிட்ட சகலவற்றையும் அடையாளம் காண்பற்கான பணிகளை,அஷ்ரஃபின் பார்வைகள், பாசறைகளிலிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படைகளில் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -