ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? - பாகம்-6


வை எல் எஸ் ஹமீட்-

நாம் வாக்களிக்கப்போகும் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் அடிப்படை எவை?
ன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் என்பது “ கரணம் தப்பினால் மரணம்” என்பதுபோன்ற ஒரு முக்கியமான தேர்தல் என்பதை எத்தனைபேர் புரிந்திருக்கின்றோம்? ஆளுக்கொரு திசையில் ‘ யானை பார்த்த குருடர்கள்போல்’ இவர்தான் சிறந்தவர், அவர்தான் சிறந்தவர் என பிரிந்து நின்று வாக்களிக்க முடியுமா? என்பது நம்மை நாமே கேட்கவேண்டிய கேள்வியாகும்.
ஒரு சிறிய கரடுமுரடான, ஒடுங்கிய மலை ஏற்றப்பாதை ஒன்றினுடாகத்தான் நாம் செல்லவேண்டிய இடத்தை அடையமுடியுமெனில் எந்த வாகனத்தையும் எடுத்துக்கொண்டு செல்லலாம்; என நினைப்போமா? அந்த மலையேற்றத்திற்கு பொருத்தமான ஒரு வாகனத்தை எவ்வளவு கவனமாகத் தெரிவுசெய்வோம். அதேபோன்றதொரு சூழல்தான் இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இருக்கின்றது; என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

நமது வேட்பாளரைத் தெரிவுசெய்யும் அடிப்படை
————————————————————-

ஒன்று: பிரதானமாக அந்த வேட்பாளர், அவரது கட்சி மற்றும் அவரின் பிரதானிகளின் தன்மை;
இரண்டு: அவரது வெற்றிவாய்ப்பின் சாத்தியம்;
இந்த இரண்டும்தான் பிரதான அடிப்படையாகும்.

இவற்றைப் பகுத்தால்:
1. ஒரு வேட்பாளர் ஏனையவர்களைவிட சிறுபான்மையை அரவணைக்கக்கூடியவர். நாட்டையும் முன்னேற்றக்கூடியவர். அவருக்கு வெற்றிவாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது அல்லது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் அவரை வெற்றிபெற வைக்கலாம்; என்றால் அவர்தான் நமது வேட்பாளர். ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவருக்கே வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறான வேட்பாளர் யாரும் இருக்கின்றாரா? அவர் நல்லவராக இருந்தும் ஓட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களித்தாலும் அவருக்கு வெற்றிபெற வாய்ப்பில்லை; எனில் அவர் நமது வேட்பாளரல்ல.
2. எல்லோரும் நல்லவர்களே! எனில் பிரிந்து வாக்களிக்கலாம். ஆபத்து இல்லை.
3. எல்லோரும் பாதிப்பானவர்களே எனில் இங்கு இரண்டு இலக்குகள் எய்தப்பட முயற்சிக்கவேண்டும். ஆகக்கூடிய பாதிப்பானவர் தோற்கடிக்கப்படவேண்டும்; குறைந்த பாதிப்பானவர் வெற்றிபெறச் செய்யப்படவேண்டும்.
4. பாதிப்பானவரின் வெற்றியை நாம் நூறுவீதம் ஒன்றுபட்டு மாற்றுதிசையில் வாக்களித்தாலும் தடுக்கமுடியாது; என்பதுதான் களயதார்த்தமானால் நாமும் அவருக்கே வாக்களிப்பதைத்தவிர வேறுவழியில்லை. அதன்மூலம் அவரது கடும்போக்கை சற்றுக்குறைக்கமுடியுமா? என்பதற்கான ஒரு முயற்சியே அது.
எனவே, இவை தொடர்பாக தெளிவான தேடல்களை நாம் செய்தாக வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கமுடியாது.
இந்தப்பின்னணியில் இவர்களின் தன்மைகள் தொடர்பாக விரிவாக அடுத்தடுத்த ஆக்கங்களில் நாம் ஆராய்வோம். இன்றைய சூழலில் இவர்களது வெற்றிவாய்ப்பு சாத்தியங்கள் தொடர்பாக ஒரு ஆரம்பக் கண்ணோட்டத்தை செய்வோம்.

இலங்கையின் சனத்தொகை விகிதாசாரம்
——————————————————

2012ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி:
சிங்களவர் :74.9%( இவர்களில் பௌத்தர்கள் 70.2,% எனவே 4.7% வீதமானோர் பிரதானமாக சிங்கள கிறிஸ்தவர்களாகும்)
இலங்கைத் தமிழர்: 11.2%
சோனகர்: 9.2% ( ஆனால் முஸ்லிம்கள் 9.7%)
மலையகத் தமிழர்: 4.2%
இதன் சுருக்கம்: பௌத்தர்கள் 70.2% ஏனைய சிறுபான்மையினர் 29.8%
இவர்களுள் தமிழ்பேசும் சிறுபான்மை 25.1% ஆகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்:
மைத்திரி: 51.28%
மஹிந்த : 47.58%
இவற்றில் மஹிந்தவுக்குக் கிடைத்த சிறுபான்மை வாக்குகள் மிகச்சிறிய விகிதமாகும். அண்ணளவாக 43% தனி பௌத்த வாக்குகளாக இருக்கலாம் ; நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும். ஆகக்குறைந்தது 40% பௌத்தவாக்குகள் என்று ஓரளவு திட்டமாகக் கூறலாம்.
மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 25% அல்லது அதைவிட சற்றுகுறைவான வாக்குகள் சிறுபான்மை வாக்குகளாக இருக்கலாம். எனவே, மைத்திரிக்குக் கிடைத்த பௌத்த வாக்குகள் 25-27% ஆக இருக்கலாம். இது ஜே வி பியின் வாக்குகளையும் உள்ளடக்குகிறது.
இதன் சுருக்கம் என்னவென்றால் 70% பௌத்த வாக்குகளில் சுமார் 40% மஹிந்தவின் வாக்குகளாக இருக்க மைத்திரிக்குக் கிடைத்த பௌத்த வாக்குகளில் ஜே வி பி யின் வாக்குகளைக் கழித்தால் சுமார் 20% பௌத்த வாக்குகளே மைத்திரிக்கு மிஞ்சியது. இதில் சுமார் 90% வாக்குகள் ஐ தே க இற்கு உரியது.
முடிவு: மஹிந்தவின் பௌத்த வாக்கு வங்கி 2015 இல் 40% இருக்க ஐ தே க யின் பௌத்த வாக்கு வங்கி 20% இற்கு உட்பட்டதாகவே இருந்தது. ஏனைய 10% வீத பௌத்த வாக்குகள் ஜே வி பி மற்றும் மைத்திரிக்காக அல்லது சிவில் அமைப்புகளுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளாக இருக்கலாம். ( இது ஓர் அண்ணளவான கணிப்பீடு மாத்திரமே).

2018 உள்ளூராட்சி சபைத் தேர்தல்
————————————————
மஹிந்த தரப்பு: 40.47% ( SLPP)
ஐ தே க 29.42%
மைத்திரி தரப்பு ( SLFP): 12.10%
ஜே வி பி 5.75%
த தே கூ 2.73%
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பு தனியாகவும் ஏனைய தரப்புகள் அனைத்தும் மைத்திரித் தரப்பாகவும் நின்ற அடிப்படையில் பார்த்தால் மஹிந்தவின் 47.58% என்ற ஜனாதிபதித் தேர்தல் வீதம் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் 40.47% ஆக சுமார் 7% குறைந்திருக்கிறது. ஆனாலும் இதனை யதார்த்த நிலைப்பாடாக கொள்ளமுடியாது; ஏனெனில் மஹிந்த தரப்பு ஒரு தொகுதி வேட்பாளரை நிறுத்த ஏனையவர்கள் பல தொகுதி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். உள்ளூராட்சிசபைத் தேர்தல் குடும்பத்தேர்தல் எனப்படும். மறுபுறம் மஹிந்த எதிர்க்கட்சி என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த வாக்குகளில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? குறைவு ஏற்பட்டிருக்கின்றதா? என்பதை கணிசமான அளவு தெளிவாக கணிப்பிடுவதற்கு நியமனப்பத்திரம் தாக்கல்செய்து இரண்டொரு வாரங்களாகவது கழியவேண்டும். இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஓரளவு எதிர்வுகூறுவதாக இருந்தால்:-

ஜே வி பி
————-

இவர்கள் கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பெற்ற சுமார் 6% மும் பெரும்பான்மையாக பௌத்த வாக்குகளாகும். 70% பௌத்த வாக்குகளில் சுமார் 10% பௌத்த வாக்குகளை ஜே வி பி இம்முறை கவரலாம். அவ்வாறாயின் எஞ்சுவது 60% பௌத்த வாக்குகள்.

ஐ தே க:
————

சஜித்தின் உடன்பாட்டுடன் ரணில் போட்டியிட்டால் ஐ தே க யின் அடிப்படை 20% பௌத்த வாக்குகளில் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படாது. சஜித், கரு அனைவரும் ஒற்றுமையாக களம் இறங்கினால் அதில் இன்னும் எத்தனை வீத அதிகரிப்பு ஏற்படலாம்; என்பது தற்போதைக்கு சரியாக எதிர்வுகூற முடியாது; ஆனாலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
மறுதலையாக ரணில், கருவின் ஆசியோடு சஜித் களமிறங்கினால் இந்த வீதம் சற்று இலகுவாக அதிகரிக்க வாய்ப்புண்டு.
கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மஹிந்த பெற்ற 40.47% வீதத்தில் சிறுபான்மை வாக்குகளும் ஒரு சிறிய விகிதாசாரம் இருக்கின்றது. எனவே, பௌத்த வாக்குகள் 40% விடக் குறைவாகும்.
மைத்திரி பெற்ற 12% வாக்குகளிலும் கணிசமான சிறுபான்மை வாக்குகள் உண்டு.
சுருங்கக்கூறின் ஐ தே க யின் சுமார் 20% பௌத்த வாக்குகளைக் கழித்தால் எஞ்சுகின்ற 50% வீத வாக்குகளில் ஜே வி பியின் சுமார் 5.5% ( 5.75 இல் 0.25% சிறுபான்மை என்று வைத்துக்கொள்வோம்) ஐக் கழித்தால் 44.5% வீத பௌத்த வாக்குகளே மஹிந்த மற்றும் மைத்திரியிடம் இருக்கின்றது. இரண்டொரு வீதம் வித்தியாசப்படலாம்.
இந்த 44.5% வாக்குகளில் ஜே வி பி கவரப்போகின்ற மேலதிக வாக்குகள்; சிலவேளை சஜித் கவரக்கூடிய மேலதிக வாக்குகள்போக எஞ்சுகின்ற வாக்குகளே மஹிந்த- மைத்திரி வாக்குகளாகும்.
SLFP தனியாக வேட்பாளர் நிறுத்தினால் அல்லது சஜித் உடைத்துக்கொண்டு சென்றால் சூழ்நிலை மாறும். அதனை பின்னர் பார்ப்போம்.
எனவே, தற்போதுள்ள களநிலவரத்தில் மஹிந்த- மைத்திரி கூட்டு 40% இற்கு குறைவான பௌத்த வாக்குகளையே பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
மொத்த சிறுபான்மை வாக்குகள் 30%. அவற்றில் தமிழ்பேசும் வாக்குகள் 25% இவற்றில் எத்தனை வீதத்தை ஐ தே க 20% அடிப்படை பௌத்த வாக்குகளுடன் இணைக்கலாம்? இதுதான் வெற்றியாளரைத் தீர்மானிக்கப்போகும் கேள்வியாகும்.
சிறுபான்மைகள் மீண்டுமொருமுறை ஒன்றுபட்டு எதிராக வாக்களித்தால் மஹிந்த தரப்பு வேட்பாளர் தோல்வியடைவது உறுதி. சிலவேளை சஜித் வேட்பாளராக வந்தால் அவரும் ஒரு தேசியவாதி என்ற அடிப்படையில் மேலும் பௌத்த வாக்குகளைக் கவர வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் மீண்டுமொரு முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாய்ப்பு சிறுபான்மைகளின் கைகளில் இருக்கிறது.
எனவே, அதிகப்படியான பௌத்த வாக்குகளைக் கைகளில் வைத்திருந்தும் சிறுபான்மையால் மீண்டுமொருமுறை தம்தரப்பு வெற்றி பறிக்கப்பட்டுவிடக்கூடாதே! என்பதில் மஹிந்த தரப்பு கவனமாக இருக்கிறது. ( இதன் பொருள் ஐ தே கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்பதல்ல. இது ஒரு கணிப்பீடு மட்டுமே!
எனது முன்னைய ஆக்கத்தில் சுட்டிக்காட்டியதுபோல இலங்கையின் தேர்தல் மேடைகளில் அறிவுபூர்வ பேச்சுக்களைவிட உணர்ச்சிபூர்வ பேச்சுக்களே வீரியம் கூடியவை. அந்தவகையில் கோட்டாவின் எதிர்த்தரப்புகள் இரண்டு பலமான பிரச்சாரங்களை முன்வைக்கிறார்கள்.
ஒன்று: கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அத்துமீறல்கள், காணாமல்போதல், உயிரிழப்புகள், வெள்ளைவேன் போன்றவைமூலம் சிங்கள மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி கோட்டாத் தரப்பு வாக்குகளை உடைத்தல்.

இரண்டு: சிறுபான்மை கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே, தோற்கப்போகின்ற வேட்பாளருக்கு வாக்குகளை வீணாக்கவேண்டாம்.
இந்த இரு பிரச்சாரமும் வேகமாக எதிரணியினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

இதை மஹிந்த தரப்பு எதிர்கொள்ளும் உத்திகள்
—————————————————————

முதலாவது குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தான் பதில். அதைச் செய்கிறார்கள். இரண்டாவது குற்றச்சாட்டுத்தான் சிறுபான்மையோடு சம்பந்தப்பட்டது.
சிறுபான்மை வாக்குத் தொடர்பாக மஹிந்த தரப்பு இரு உத்திகளைக் கையாள்கிறது.
ஒன்று: 
சிறுபான்மை வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது; என்ற மனோநிலையை உடைத்து சிறுபான்மை வாக்கு கிடைக்கும் என்று பெரும்பான்மை மக்களுக்குக் காட்டுவதற்காக முடிந்தளவு முஸ்லிம்கட்சிகள், ( பதிவு செய்யப்பட்டதோ, பதிவுசெய்யப்படாததோ; மற்றும் அமைப்புகள், புத்திஜீவிகளை இணைத்து அவர்களுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்வதுபோல் ஏதோ ஒன்றைச்செய்து ‘ சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்’ என்று பெரும்பான்மை சமூகத்தை நம்பவைக்க முயற்சி நடைபெறுகிறது.

இரண்டு:
மறுபுறம் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் ஒரு தமிழ்வேட்பாளரையும் தனியாக இறக்குதல்.
இதில் தமிழ் வேட்பாளர் விடயத்தில் வெற்றிபெற்றிருக்கின்றார்களா? என்பது தெரியவில்லை. முஸ்லிம் வேட்பாளர் விடயத்தில் வெற்றிபெற்றுவிட்டார்கள். குறித்த இலக்கை நோக்கி நகர்பவர்கள் “ இரவில் டானியல்; பகல் மிக்கேல்” என்பதுபோதுபோல் அவர்கள் அந்தத்தரப்பை சந்திப்பதும் திட்டம் தீட்டுவதும் வெளியில் சமூகத்தின் பெயரால் தனித்துப்போட்டியிடும் கோசம் முன்வைப்பதுமான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதன் நோக்கம் முடிந்தால் இரண்டாவது வாக்கினூடாக சிறுபான்மை வாக்குகளை முடிந்த அளவு பெற்றுக் கொள்ளல். அல்லது ஆகக்குறைந்தது அடுத்த தரப்புக்கு செல்லும் சிறுபான்மை வாக்குகளைக் குறைத்தல்.
தமிழ்பேசும் வாக்குகள் 25% ஐ தே க யின் அண்ணளவான பௌத்தவாக்குகள் 20% உடன் இணைந்தால் 45% ஆகிவிடும். சிங்களக் கிறிஸ்தவ வாக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில் ஒரு 10% சிறுபான்மை வாக்குகள் ஐ தே கட்சிக்கு செல்வதைத் தடுத்தாலும் ஐ தே க வாக்குகள் அண்ணளவாக 35% இற்குள் மட்டுப்படுத்தப்பட பெரமுன வாக்குகள் 40% வீதத்தைத் தாண்டும். அது தன்வெற்றியை உறுதிசெய்யும் என்று நம்புகிறார்கள்.
எனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, முஸ்லிம்கள் தனித்துப்போட்டியிடுவது கொள்கைரீதியாக பிழையான விடயமல்ல. அவ்வாறாயின் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து இதயசுத்தியோடு சமூகத்திற்காக ஒரு தீர்மானத்தை எடுத்து இரண்டாம் வாக்கை பொருத்தமான ஒருவருக்கு வழங்கலாம். அது வேறுவிடயம். ஆனால் ஒரு தரப்பின் கைக்கூலியாக வந்து முஸ்லிம்களின் வாக்குகளைக் கூறுபோட்டு முஸ்லிம்களுக்கு அநியாயம்செய்து தான் தனது தனிப்பட்ட நலன்களை அடையமுற்படுவது மனவேதனையளிக்கிறது.
இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு சமூகம் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோதும் அதனைக் கண்டுகொள்ளாமல் தன்னைப்பற்றி மட்டும் சிந்தித்து செயற்பட்டார்களோ அதேபோன்றதொரு கைங்கரியத்தை மீண்டும் செய்யமுற்படுகிறார்கள்.
இவர்கள் ஏன் மூன்று லட்சம் முஸ்லிம் வாக்குளையாவது பெறவேண்டும்: என இலக்கு வைக்கிறார்கள்; என சிந்தித்தீர்களா?
முஸ்லிம் வாக்குகள் சுமார் 15 லட்சம் இருக்கின்றன. எனவே, முதலாவது இதன்பொருள் முஸ்லிம் வாக்குகளை கூறுபோட ஆயத்தம் என்பதை பகிரங்கமாக கூறுகிறார்கள். இது இவர்களது எஜமானர்கள் சொல்லிக்கொடுத்தது.
மூன்று லட்சம் என்பது 10% முஸ்லிம் வாக்குகளில் 2% ஆகும். அளிக்கப்படும் செல்லுபடியான வாக்குகளில் சுமார் 3% ஆகும். இன்னுமொரு 2% நேரடியாக அந்தத்தரப்புக்குப் போனாலும் முஸ்லிம்களின் 10% வாக்குகளில் 5% வாக்குகள் பிரிக்கப்பட்டுவிட்டன. எனவே, ஐ தே க யின் வாக்குகளில் 5% உடைக்கப்பட்டதாகிவிட்டது. இதேபோன்று ஓரளவு தமிழ் மற்றும் மலையகத் தமிழ் வாக்குகளையும் பிரிக்கமுடியுமானால் இலக்கை இலகுவாக அடையலாம்.
எனவே, நமது கண்களை நமது விரல்களைக்கொண்டு குத்துவதற்கு நம்மவர்களே துணைபோய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் திட்டம் சரியாக வேலை செய்யாவிட்டால் இவர்களே ஆட்களைப்போட்டு மறைமுகமாக ஜே வி பி க்கு ஆதரவளிக்க முஸ்லிம்களைத் தூண்டத் தயங்கமாட்டார்கள்.
சிறுபான்மை ஆதரவளிக்காவிட்டாலும் பிரதான எதிர்தரப்பிற்கு அவ்வாக்குகள் சென்றுவிடக்கூடாது; என்ற தம் எஜமானர்களின் எண்ணங்களை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு நான் இந்தத் தரப்பிற்குத்தான் வாக்களிக்க வேண்டும்; இந்தத் தரப்பிற்கு வாக்களிக்கக்கூடாது; என்ற எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. சகலவிடயங்கறையும் சீர்தூக்கி ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு தீர்மானிக்கவேண்டிய சமயத்தில் கலந்தாலோசனை என்ற பெயரில் பணம் செலவுசெய்து விருந்துகள் வைத்து மக்கள் மூளைச்சலவை செய்யப்படுவது எவ்வளவு துரோகமானது.
தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது இவர்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்கமாட்டார்களா?
இன்னும் சிலர் அடித்தளம் போடுகிறார்கள். சமூகம் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை; கட்சியைப் பாதுகாருங்கள்; என்று இவ்வளவு காலமும் கோசமெழுப்பியவர்களுக்கு இப்பொழுதுதான் சமூகம் இருப்பது தெரியவந்திருக்கிறது. “ கட்சியைப்பாதுகாப்பதா? சமூகத்தைப் பாதுகாப்பதா? என இப்பொழுது கேள்வியெழுப்புகிறார்கள்.
கடந்த தேர்தலில் முஸ்லிம் சமூகம் தவறிழைத்துவிட்டதாம்! போதாக்குறைக்கு வட கிழக்கு இணைப்பைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ( வட கிழக்கு இணைப்பை எதிர்ப்பது வேறுவிடயம்; ஆனால் அது தேர்தலுக்குத் தேவைப்படும்போது மாத்திரம் ஏன் பாவிக்கப்படுகின்றது?)
எனவே, தயவுசெய்து நேர்மையாக சிந்தியுங்கள். இந்தத் தரப்பு எங்கள் எதிரியுமல்ல, அந்தத் தரப்பு எங்கள் நண்பர்களுமல்ல. சற்றுப்பொறுத்திருங்கள். எல்லா வேட்பாளர்களும் பெயரிடப்படட்டும்; அதன்பின் அனைத்துக்கட்சிகளும் முக்கிய சிவில் அமைப்புகளும் ஓர் பொது இடத்தில் கூடுங்கள்.
ஒன்றுக்கு இரண்டு நாள் ஓர் செயலமர்வை நடாத்துங்கள். அதில் அக்குவேறு, ஆணிவேறாக இருதரப்பு சாதக பாதகங்களையும் ஆராயுங்கள். அதன்பின் இதயசுத்தியோடு அல்லாஹ்வைப் பயந்து சமூகத்திற்காக முடிவெடுங்கள். அல்லது அனைவரும் இணைந்து தனித்து ஓர் வேட்பாளரை இறக்கி இரண்டாவது வாக்கை பொருத்தமான ஒருவருக்கு கொடுங்கள்.

இவ்வளவு காலமும் சமூகத்தின் தோள்கள்மீது சவாரி செய்தீர்கள். நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் சமூகத்திற்கு ஏன் இந்த அவலநிலை. இனியாவது திருந்தமாட்டீர்களா?
நீங்களும் திருந்தாவிட்டால் சமூகமும் திருந்தாவிட்டால் முடிவு என்ன?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -