முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவினால் பௌத்தபீட அரசின் மறைமுக அதிகாரம் ஆட்டம் கண்டுவிட்டது.


பஷீர் சேகு தாவூத்-
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்தவுடன் இரண்டு அரசாங்கங்கங்கள் உருவாகின. ஒன்று மக்கள் வாக்களித்து உருவாகும் அரசாங்கமாகும். இது, கடந்த ஏழு தசாப்தத்துக்கும் மேலாக அனைத்து இன மத மக்களினது வாக்குகளையும் பெற்று அமைக்கப்பட்டாலும் இவ்வரசாங்கங்கள் பௌத்த அரசாட்சியையே நடாத்திவந்தன.ஆகவே இவை பௌத்த அரசுகள் எனவழைக்கப்படுகின்றன. மற்றையது மக்களால் தெரிவு செய்யப்படாத பௌத்த பீடங்களின் அரசாட்சியாகும்.எனவே நாட்டில் பௌத்த அரசும், பௌத்த பீடங்களின் அரசும் என இரண்டு அரசுகள் இருக்கின்றன.

இந்தப் பீடங்களின் ஆட்சி மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயகம் என்ற பெயரில் இயங்கிவந்த அனைத்து அரசாங்கங்களின் தீர்மானங்களிலும் தலையீடு செய்யும் அதிகாரத்தை பெற்றிருந்தது. வரலாற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவ்வரசு தலையீடு செய்த தருணங்களைக் காணலாம்.மேலும் தனது அங்கீகாரமற்ற தீர்மானங்களை வன்முறை மூலம் அழித்த வரலாறும் இப்பீடங்களின் அரசுக்கு உண்டு. பண்டா- செல்வா ஒப்பந்தத்தை அன்றைய எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கிழித்தெறிந்தது மட்டுமல்லாமல் இதற்கு காரணமாக இருந்த சிங்கள பௌத்த தலைவரான அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க பிக்கு ஒருவரால் சுட்டுக்கொல்லவும்பட்டார்.இக்காலகட்டம் சிறுபான்மைத் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அன்றைய அரசுடன் ஓரளவு பேரம் பேசும் நிலையில் இருந்த காலமாகும்.
யுத்த காலத்தில் இருந்த பௌத்த அரசுகளில் முஸ்லிம்களுக்கு இருந்த பேரம் பேசும் ஆற்றலை பௌத்தபீடங்களின் அரசாங்கம் கண்டும் காணதது போல பாவனை செய்து தவிர்க்க முடியாமல் வாழாவிருந்தது.
2009 க்கு பிற்பட்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பௌத்த அரசாங்கங்களில் முஸ்லிம் மக்களின் பேரம்பேசும் சக்தியை பௌத்தபீடங்களின் அரசாங்கம் ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டி செயல்பட்டு வந்ததன் விளைவே கடந்த ஒரு தசாப்தகாலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டு வந்த கசப்பான அனுபவங்களாகும். இதன் முற்றிய நிலையை கடந்த ஏப்பிரல் 21 க்கு பின்னர் காணமுடிகிறது.
சில நாட்களுக்கு முன்னர் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்த வரலாற்று நிகழ்வின் மிக முக்கியமான தாக்கம் மேற்குறித்த பௌத்தபீடங்களின் அரசாங்க அதிகாரத்தின் மீதுதான் விழுந்திருக்கிறது. உண்மையில் இந்த அமைச்சுப் பதவிகள் துறப்பின் மூலம் கலைந்திருக்கவேண்டியது ஐ.தே.கட்சி அரசாங்கம்தான். ஆனால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இருந்து விலகமாட்டோம் என்று அறிவித்ததன் விளைவாக தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பௌத்த அரசு தப்பிக்கொள்ள மக்களால் தெரிவு செய்யப்படாத தம்மைத் தாமே பிரகடனப்படுத்துகிற பௌத்தபீடங்களின் அரசு அகப்பட்டுக்கொண்டுவிட்டது.
முஸ்லிம் அமைச்சர்கள் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்காதமையாலும், முஸ்லிம்களின் ஆழும் அதிகாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும் பௌத்தபீடங்களின் அரசாங்கம் தற்போதைய ஐ.தே.கட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான காரண காரியங்கள் அற்றுப்போயுள்ளன.
இப்போது அழுத்தம் பிரயோகிப்பதானால் மலையகத் தமிழரை காரணமாக வைத்தே பிரயோகிக்க வேண்டும். இது இப்போதைய சூழலில் அவர்களுக்கு அவசியமற்றதாகும். மட்டுமல் இந்தியப் பிரதமர் மோடி மலையகத் தமிழர் மீது "ஒருவகை' அக்கறை செலுத்துவதும் பீடங்களின் அரசு தனது காலை மலைக்கடலில் ஆழமாக விடுவதற்கு தயங்குவதற்கான காரணமாக இருக்கலாம்.
எதிர்பாராமல் தாம் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறும் நோக்கத்தில்தான், அண்மையில் ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவைத் தெரிவித்த ஞானசார தேரர் ஊடக மாநாட்டை அவசரமாகக் கூட்டி ரத்ன தேரரை குற்றம் சுமத்தவேண்டி ஏற்பட்டது. விசேடமாக, ரத்ன தேரரின் கோரிக்கையை உடனடியாகக் கவனத்தில் எடுக்குமாறு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தம் கொடுத்து கடினமான கடிதங்களை எழுதிய மகாசங்கத்தினர் இன்று, பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புக்களை எடுக்கவேண்டும் என்று அவசரமாக வேண்டுகோள் விடுக்கவும் நேர்ந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் விரிக்கப்பட்டுள்ள வலையில் முஸ்லிம் தலைவர்கள் வீழ்கிறார்களா இல்லை விலகிப் போகிறார்களா என்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -