Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ் வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்ஸ்?


சுஐப் எம் காசிம்- 
காலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றி விழாவில் பிரதமர் ரணில் அறிவித்த டையமன்ஸ் எலைன்ஸின் எதிர்காலம் எப்படிப் பளிச்சிடப்போகிறது?
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள "டையமண்ட் எலைன்ஸின்" எதிர்கால வெற்றிக்கான வெள்ளோட்டம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாடி பிடித்துப்பார்க்கப்படுமா? மாகாண சபைத்தேர்தல் டையமண்ட் எலைன்ஸிலுள்ள முஸ்லிம் தலைமைகளின் கூட்டுறவைப் பலப்படுத்துமா?
ரணில் உருவாக்கி அவரது சகாக்கள் அனுபவிக்கவுள்ள ஆட்சி, அதிகாரத்தில் இதிலுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்குமா? இவ்வாறு கிடைக்கும் இந்த இடம் முஸ்லிம் சமூகத்திற்கு விமோசனம் தருமா? பதில் எதையும் இப்போது சொல்ல முடியாதுள்ள இந் நிலைமையை தற்போது ஆராய்ந்து பார்க்க மட்டுமே முடியும்.முதலில் இந்த எலைன்ஸ் எதைச் செய்யும் என்று பார்ப்போம்.
எந்தத் தேர்தலானாலும் ராஜபக்ஷக்களை வீழ்த்தும் யுக்திக்கு முதலிடம் வழங்கும். இரண்டாவது இந்த எலைன்ஸுக்குப் பின்னால் உள்ள வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு பிரதான இடம் வழங்கப்படும். மூன்றாவது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் அதிக கவனமும் எடுக்கப்படும். வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கன்றி தோழமைக்கட்சிகளின் தொல்லைகளே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் செல்வாக்குச் செலுத்தும். இத்தொல்லைகளை கண்டு கொள்ளாது காலம் கடத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் வழமையான பழைய யுக்திகள் இம்முறை செல்லாக் காசாக்கப்படும். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மைத்திரி, மஹிந்த கூட்டைத் தோற்கடிக்க முஸ்லிம் தலைமைகளின் தயவு தேவைப்படுவதால் முஸ்லிம் தலைமைகளுக்கு எதையாவது செய்யும் நிர்ப்பந்தம் டையமண்ட்ஸ் எலைன்ஸுக்கு ஏற்படும். அது வரைக்கும் மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் டையமண்ட்ஸ் எலைன்ஸின் தோளில் வலம் வந்து, டையமண்ட் விலைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும் திகழும். மாகாண சபை, பாராளுமன்றம், ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து முடியும் வரை முஸ்லிம் தலைமைகளுக்கு சாதகமான காற்றடிக்கும். பின்னர் டையமண்ஸ் எலைன்ஸ் வெற்றிக்கனியைத் தொட்டு விட்டால் நிலைமைகள் தலைகீழாக மாறும்.
ராஜபக்ஷ அல்லது மைத்திரிக்குப் புகலிடம் வழங்கும் கூட்டணியைத் தோற்கடித்தால் இன்னும் இரு தசாப்தங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அலையே வீசும். ரணிலுக்குப் பின்னர் வரவுள்ள கட்சியின் தலைமை ஏற்கனவே பிரபல்யம் பெற்ற குடும்பத்து வாரிசு என்பதாலும் தோல்வியில் ஏற்படவுள்ள உட்கட்சிப் பூசல்களால் ராஜபக்ஷ, மைத்திரி முகாம்கள் வீரியம் இழப்பதாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு தலைக்கனமும் அதிகரிக்கும். பிறகு இந்த தலைக்கனத்தை வெல்லக்கூடிய செருக்குத்தனம் முஸ்லிம் தலைமைகளுக்குத் தேவைப்படும். இது தேர்தலில் எட்டப்பட்ட உடன்படிக் கைகளைப் போராடிப் பெறும் பேரம் பேசலைப் பலப்படுத்தும். இப் பேரம் பேசல்களே எலைன்ஸுக்குள் உள்ள முஸ்லிம் தலைவர்களைப் பிளவும் படுத்தும். கிழக்கைத் தளமாகவுடைய முஸ்லிம் காங்கிரஸும், வடக்கைத் தன்வசப்படுத்திய மக்கள் காங்கிரஸும் இன்னும் தெற்கில் ரணிலுக்கு விசுவாசமான முஸ்லிம் எம்பிக்களும் இந்த முச்சந்தியிலிருந்து வேறு திசைகளில் பயணிக்கும் நிலை தோன்றலாம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள், ஒருவரையொருவர் விமர்சித்து நிலைப்படும் போக்குகள், அஷ்ரஃபின் அடிநாதங்கள் நாமே என்ற விவாதங்கள், ஏக தலைமையைக் கைப்பற்றும் போட்டிகள் நிச்சயமாக இத் தலைமைகளை ஒன்றித்தலிலிருந்து தூரப்படுத்தும். டையமண்ட் எலைன்ஸுக்குள் இருப்பதால் தலைமைகள் ஒன்றுபட்டதாக அர்த்தம் கூற முடியாதளவிற்கு, தேர்தல் களங்களில் குத்து வெட்டுக்கள், குழி பறிப்புக்கள் மேலோங்கும். இந்தப்பிளவுகளைப் பயன்படுத்த ஐக்கிய தேசிய கட்சி தருணம் தேடும். இந்தத் தருணங்களை வெற்றி கொள்வதற்காக முஸ்லிம் தலைமைகள் முண்டியடிக்கும். இதனால் ஸ்ரீகொத்தாவின் பிளிறல்களுக்கும், யானைப்பாகர்களின் பயமுறுத்தல்களுக்கும் இக்கட்சிகள் பயப்பட நேரிடும்.

தேசிய அரசியலில் பிரதான எதிரி வீழ்த்தப்பட்ட பின்னர் டையமண்ட் எலைன்ஸைத் தவிர எந்தக் கூட்டணிக்குள்ளும் முஸ்லிம் தலைமைகள் பிழைக்க முடியாதும் போகும். தடயம் தெரியாது வீழ்ந்துள்ள ராஜபக்ஷ முகாமுக்கு எவரையும் தேடித்திரிந்து கூட்டமைப்பு அமைக்கும் தேவைகளும் ஓரிரு தசாப்தங்களுக்கு அவசியப்படாதுமிருக்கும். இதனால் கட்டிவைத்த கட்சிகள் அனைத்தும் டையமண்ட் எலைன்ஸுக்குள் கட்டுண்டும் கிடக்கும்.

எலைன்ஸுக்கு வரவுள்ள வெளிநாட்டு அழுத்தங்கள் முஸ்லிம் தரப்பின் அரசியல் அபிலாஷைகளையும் கூறு போடுவதால் இந்தக்கட்டும், கட்டுப்பாடும் சில வேளைகளில் முஸ்லிம் தலைமைகளை விரக்தியூட்டும்.

”வடக்கைப் பிரி”யென்ற சிலரதும், ”கிழக்கை இணை”யென்ற வேறு சிலரதும் கோரிக்கைகளையும், தமிழர் தாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான முஸ்லிம் தலைமைகளின் புரியாத புதிரையும் வெளிநாடுகளும் இதுவரை புரிந்திருக்கும். இத்தனை வருடப்போராட்டத்திலும் இது வரைக்கும் தெளிவில்லாத முஸ்லிம் தலைமைகளின் சூட்சுமமும் ரணிலுக்கும் புரிந்திருக்கும். இந்த இழுபறிக்குள் எப்படி இப்படியொரு கூட்டுக்குச் சாத்தியம்.
அம்பாரையில் அமையும் தேர்தல் கூட்டுக்கு ஆசனங்களை விட்டுக் கொடுக்கும் பெறுமதியான பொறுமை யாரிடம் இருக்கும்? இக்களம் பொதுவான டையமண்ட் எலைன்ஸுக்குள் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் முஸ்லிம் தலைமைகளை முரண்பட வைக்கும். முஸ்லிம் தேசியம், தனித்துவம், அபிலாஷைகளில் இதுவரையும் எதிரும் புதிருமாகவுள்ள மு.கா. ம.கா பிரச்சாரங்கள் சிலரைச் சிந்திக்க வைக்கும். வடக்கையும் பிரி, கிழக்கையும் வேறாக்கு என்ற மக்கள் காங்கிரஸின் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் முதிர்ச்சியடையாத முழக்கம் என்கும். வடக்கு, கிழக்கு விடயத்தில் இது வரை தீர்க்கமாக எதையும் தெரிவிக்காத முஸ்லிம் காங்கிரஸின் நழுவல் போக்கை, சந்தர்ப்பவாதமாகக் காட்டி மக்கள் காங்கிரஸ் காய்பறிக்கும். இதனால் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே வெறுப்பும் வீறாப்பும் மேலோங்கும்.

கடைசியில் விருப்பு வாக்குகளில் வேட்டு வைக்கும் நிலைமையையும் இது ஏற்படுத்தும். இச்சூழல் டையமண்ஸ் எலைன்ஸை நிர்க்கதியாக்கும். பின்னர் என்ன, பிரச்சாரங்கள் அனல் பறக்கும். அம்பாரை மாவட்டத்திலுள்ள 14 மாகாண சபை உறுப்பினர்களில் ஐவரை வெல்வதற்கான பிரயத்தனங்கள் உக்கிரமாகி வக்கிரமாகும். நான்கு ஆசனங்களை வெல்ல முஸ்லிம் காங்கிரஸும், இரண்டு ஆசனத்தையாவது வெல்ல மக்கள் காங்கிரஸும் விருப்பு வாக்குகளைக் குறி வைக்கும்.சி ன்னம் டையமண்ஸானாலும் இலக்கம் வெவ்வேறாக இருப்பதால் நீருக்குள் நெருப்பைக் கடத்தும் பிரயத்தனங்களே இக் களத்தில் மேலோங்கும். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 மாகாண சபை ஆசனங்களில் நான்கு ஆசனங்களையும், திருகோணமலையில் பத்து ஆசனங்களில் மூன்றையும் வெல்லும் முயற்சிகளில் இக் கட்சிகளுக்கு ஏற்படும் வெற்றிகளே டையமண்ஸ் எலைன்ஸின் ஆயுளையும் தீர்மானிக்கும்.

ரணிலின் பிரதமர் பதவியைக் காப்பாற்றிய மு.கா மற்றும் ம.காவின் ஒற்றுமைகள் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலிகளில் நிலைத்தாலும் நிச்சயம் பொதுத்தேர்தலில் சில்லறையாகச் சிதறும். முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற மொத்த வியாபாரம் தேவைப்படும் நிலையில் இச்சில்லறை வியாபாரம் அரசியலில் விழலுக்கிறைத்த நீராகிப் போகும். இந்த ஒவ்வொரு நீர்த்துளிகளும் ஒவ்வொரு முஸ்லிமின் கன்னக் குழிகளையும், கண்விழிகளையும் ஈரப்படுத்தியே ஆகும்.

புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகளை கண்டு திணறும் ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தில் எதைச் செய்யும் என்பதும் இம்முஸ்லிம் தலைமைகளுக்குத் தெரியவரும். இதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் இல்லாமலா போகும்?

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.