புதிய நகல் யாப்பு - பாகம் 2


வை எல் எஸ் ஹமீட்-

சமஷ்டியின் இரண்டாவது பிரதான அம்சம்:
Substance
——————————————————-

மஷ்டியின் வடிவம் அல்லது வெளித்தோற்றம் எவ்வாறு இருந்தபோதிலும் சமஷ்டி நிஜத்தில் பெறப்படுவது மத்திய பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தில் பிராந்திய சபைகளின் அதிகாரம் தொடர்பாக கட்டுப்பாடுகளை கொண்டுவருவதன் மூலமாகும்.

மத்திய பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படாதபோது ‘ ஒற்றையாட்சி என்கின்றோம். தற்போது மத்திய பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையினால் மாகாணசபையின் எந்தவொரு அதிகாரத்தையும் மாற்றலாம்; மாகாணசபை முறையைக்கூட இல்லாமலாக்கலாம்.

பிராந்திய சபைகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு முழுமையான கட்டுப்பாடு இருக்கின்றபோது, அதனை முழுமையான சமஷ்டி என்கின்றோம்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட, அதாவது கட்டுப்பாட்டின் வீரியம் குறைகின்றபோது அந்த வீரியத்தின் தன்மைக்கேற்ப வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட வகைகளின் பொதுப்பெயராக ( Quazi Federalism) என்ற சொற்பதம் பாவிக்கப்படுகின்றது. அதாவது முழுமையற்ற, இடைப்பட்ட அல்லது அரை சமஷ்டி என்று அழைக்கப்படலாம். ( இதற்கு தமிழில் நேரடியான சொல் இருந்தால் தயவுசெய்து தந்துதவுங்கள்)

இந்தக்கட்டுப்பாடு எவ்வாறு பெறப்படுகின்றது?
———————————————————-

இந்தக்கட்டுப்பாடு இருவகையில் பெறப்படுகிறது.

(1) Procedural Limitation
(2) Substantive Limitation

Procedural Limitation
——————————-
இது விதிமுறைகள் தொடர்பான கட்டுப்பாடு. அதாவது, நமக்குத் தெரியும், பாராளுமன்றத்தில் சில விடயங்களுக்கு 2/3 பெரும்பான்மை, சில விடயங்களுக்கு அறுதிப்பெரும்பான்மை ( 113) தேவை. ஏனைய விடயங்களுக்கு சாதாரண பெரும்பான்மை போதும்.

இங்கு பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படவில்லை, சட்டவாக்கமுறைதான் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஏனெனில் இந்த சகல பெரும்பான்மையும் பாராளுமன்ற எண்ணிக்கையான 225 இற்கு உட்பட்டதுதான். ஆளும் கட்சியிடம் 2/3 பெரும்பான்மை இருக்கின்றதா? என்பது அரசியல் பிரச்சினை.

Substantive Limitation
———————————-
இது பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும். அதாவது பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரத்தை வெளியில் எடுத்து இன்னுமொரு தரப்பிற்கு வழங்குவதாகும்.

தற்போது குறிப்பிட்ட சில சரத்துக்களை திருத்துவதாயின் அல்லது புதிய யாப்பு கொண்டுவருவதாயின் 2/3 இற்கு மேலதிகமாக மக்கள் அனுமதியும் வேண்டும்.

இதன்பொருள் 225 பா உ களும் ஆதரவாக வாக்களித்தாலும் அச்சட்டமூலம் நிறைவேறாது. அது வெறும் procedure மாத்திரமே. மக்கள் சர்வஜனவாக்கெடுப்பில் அனுமதித்தால்தான் அது சட்டமாகும்.

அதாவது இந்த விடயத்தில் பாராளுமன்ற சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் உண்மையான அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. இது substantive limitation எனப்படுகிறது. இந்த விடயத்தில் பாராளுமன்றத்திற்கு சுயமாக எதுவும் செய்யமுடியாது.

மாகாணசபை
——————-

தற்போதைய 13 வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரத்தையும் மாற்றவோ அல்லது மாகாணசபை முறைமை நீக்கவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது. தேவை 2/3 பெரும்பான்மை, அவ்வளவுதான். அது ஒரு procedural limitation மாத்திரமே. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படவில்லை. பாராளுமன்றம் மீயுயர்வானது; மாகாணசபை அதன்கீழானது; என்ற ஒற்றையாட்சித் தத்துவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுமானால் அங்கு substantive limitation வந்துவிடும்.

இப்பொழுது புதிய நகல் யாப்பில் பாராளுமன்றத்திற்கு மாகாணசபை தொடர்பாக substantive limitation கொண்டுவரப்பட்டுள்ளதா? என ஆராய்வோம்.

புதிய நகல் யாப்பின் சரத்து 145 இது பற்றிக் கூறுகின்றது. அதாவது மாகாணசபைகளுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரத்தை திருத்துவதற்காக, நீக்குவதற்காக அல்லது மாற்றுவதற்காக ஒரு சட்டமூலம் கொண்டுவரப்படுமானால் அது பாராளுமன்றத்தினதும் இரண்டாவது சபையினதும் ( மேல் சபை) 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவதோடு சர்வஜன வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மாகாணசபை விவகாரத்திலும் பாராளுமன்றத்திற்கு substantive limitation கொண்டுவரப்படுகின்றது. அதாவது பாராளுமன்றம் சுயமாக செயற்படும் அதிகாரம் நிரந்தரமாக முடக்கப்படுகிறது. இந்த substantive limitation தான் சமஷ்டி என அழைக்கப்படுகிறது.

மாகாணசபையின் சட்டவாக்க அதிகாரத்திற்கான காப்பீடு
————————————————————

மேற்படி சரத்து 145 மாகாணசபையின் மொத்த அதிகாரத்திற்கான ( சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நிதித்துறை) காப்பீடு தொடர்பாக பேசுகின்றது. புதிய நகல் யாப்பின் சரத்து 132 மாகாணசபையின் சட்டவாக்க அதிகாரத்திற்கான மேலதிக காப்பீடு தொடர்பாக பேசுகின்றது.

இதன்பிரகாரம் மாகாணசபையின் நிரலில் ( Provincial List) குறிப்பிடப்பட்ட எந்தவொருவிடயம் தொடர்பாகவும் பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றுவதாயின் அதற்கு அனைத்து மாகாணசபைகளும் சம்மதிக்க வேண்டும். ( ஒரு மாகாணசபை சம்மதிக்காவிட்டாலும் முடியாது) அல்லது 2/3 பெரும்பான்மையால் அதனை நிறைவேற்றுவதோடு அது சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டாலும் அதே விடயம் சம்பந்தமாக மாகாணசபை அதன்பிறகு சட்டமியற்றுவதை அது பாதிக்காது. அவ்வாறு சட்டமியற்றுனால் அந்த சட்டத்திற்கும் அதேவிடயம் சம்பந்தமாக மாகாணசபை இயற்றிய சட்டத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தால் மாகாணசபையின் சட்டமே அந்த முரண்பாடுகளைப் பொறுத்தவரை செல்லுபடியாகும்.

அதாவது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜனவாக்கெடுப்பும் நடாத்தி ஒரு சட்டத்தை பாராளுமன்றம் உருவாக்கினாலும் அதேவிடயம் தொடர்பாக மாகாணசபை உருவாக்குகின்ற சட்டம் அந்த பாராளுமன்ற சட்டத்தை மேவும். இங்கு சர்வஜன வாக்கெடுப்பே பெறுமதியற்றதாக மாறுகின்றது.

அதாவது மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சுயமாக செயற்படும் அதிகாரம் முழுமையாக முடக்கப்படுகின்றது. மக்களின் அதிகாரம் அரசியலமைப்பில் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களைத் திருத்துவதில் செல்லுபடியாகும். ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் சாதாரண சட்டங்களை ஆக்குவதில் செல்லுபடியாகாது.

உதாரணமாக கல்வி அதிகாரம் மாகாணங்களுக்குரியது; என்று அரசியலமைப்பில் கூறப்பட்டால் பின்னர் கல்வி அதிகாரத்தை அல்லது ஒரு பகுதியை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்.

அதே கல்வி அதிகாரத்தின் கீழ் மத்திய அரசாங்கம் தேசிய பாடசாலை போன்று ஒரு புதிய பாடசாலைமுறைமையை அல்லது ஒரு புதிய கல்வித்திட்ட முறைமையை உருவாக்க ஒரு சாதாரண சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால் அனைத்து மாகாணசபைகளும் ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் வேண்டும். அதன்பின் மாகாணசபை விரும்பினால் அவற்றிற்கு முரணான சொந்த பாடசாலை முறைமை அல்லது கல்வி முறைமையை அவர்களது சட்டத்தினால் உருவாக்கினால் அதுதான் செல்லுபடியாகும்.

எவ்வளவு உச்ச அதிகாரம் என சிந்தித்துப் பாருங்கள்.

இதனைத்தான் சுருக்கமாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட விடயங்களில் ( reserved list ) பாராளுமன்றம் supreme மீயுயர்தன்மையானது. மாகாணசபை தலையிட முடியாது. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மாகாணசபை supreme மீயுயர்வானது. பாராளுமன்றம் தலையிட முடியாது, எனப்படுகிறது. இதுதான் சமஷ்டியின் பிரதான அடையாளம்.

இரண்டும் சமாந்தர அரசாங்கங்கள். இதனால்தான் “ ஏக்கிய ராஜ்ய” என்று சரத்து1 இல் கூறிவிட்டு அது “ மத்திய மாகாண நிறுவனங்களை உள்ளடக்குகிறது” என்று கூறியிருக்கிறார்கள். அதாவது சமஷ்டியை சமஷ்டி என்ற சொல்லைத் தவிர்த்து வேறுவகையில் கூறியிருக்கிறார்கள்.

எனவே இலங்கையில் தன்னாதிக்க அதிகாரம்கொண்ட ஒருவரில் இன்னொருவர் தலையிடமுடியாத பத்து அரசாங்கங்கள் இருக்கப்போகின்றன.

(தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -