நல்லூர் கந்தசாமி கோவிலின் மூலஸ்தானத்தின் பின் பகுதியில் "முகம்மது இப்ராகிம்" என்னும் பெரியாரின் சியாரம் இப்பொழுதும் உள்ளது...!


எம். எச்.எம்.இப்றாஹிம்-

இலங்கையில் உள்ள முஸ்லிம் இனம் கி.பி. 8ம் நூற்றாண்டுக்கு முதலே இலங்கையில் குடியேறிய அராபியக் குடியேற்றத்தின் வாரிசுகள் என அறியப்படுகிறது. சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் கூற்றுப்படி கி.பி.8ம் நூற்றாண்டுக்கு முன்பே முஸ்லிம்களின் குடியேற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். வேறு ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 8ம் நூற்றாண்டுக்குபின் இந்தியாவின் மலையாளக் கரையோரங்களிலும் மாலைதீவுப் பகுதிகளிலும் முஸ்லிம்களின் குடியேற்றம் நடைபெற்ற அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தொடக்கம் காலிமுனை வரையிலும் முஸ்லிம்கள் குடியேறி இருக்கவேண்டுமென கருதப்படுகிறது.

இலங்கை முஸ்லிம் மக்களின் வரலாறானது நீண்டதொரு காலத்தைக் கொண்டதாக இருக்கின்றது. இவர்களது முதலாவது குடியேற்றம் வடபகுதியில்தான் நடந்திருக்கவேண்டும் என்பதை அவர்கள் தங்கள் தாய்மொழியாகத் தமிழை பேசுவதிலிருந்தும் அவர்களது கலாச்சாரத்தில் இலங்கைத் தமிழர்களது, குறிப்பாக வடபகுதி தமிழர்களது பாதிப்பு இருப்பதிலிருந்தும் அறிந்துகொள்ளமுடியும். ஆரம்ப காலத்தில் வடபகுதியில் முஸ்லிம்கள் குடியேறிய அல்லது வாழ்ந்த இடங்களை எம்மால் அடையாளம் காணக்கூடிய இடங்களாக அலுப்பாந்தீவு, பறங்கித்தெரு, சின்னக்கடை, கோட்டை, நயினா(ர்)தீவு, மண்கும்பான், மண்டைதீவு, காரைதீவு, மீசாலை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவாந்துறை, நல்லூர், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.
இந்த இடங்களில் சில சோனகன்வடலி, சோனகவெளி, சோனகரடைப்பு, என்ற பெயர்களில் அழைக்கப்படுவதுடன் மீசாலையில் 'உசன்' என்றழைக்கப்படும் இடம் இருப்பதும் இதற்கு ஆதாரமாகும்.

இன்று யாழ்பாணத்தில் சின்னக்கடையில் உள்ள புதுமை மாதா ( our Lady of Miracles ) தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தில் முன்பு பெரியதொரு ஜும்மா பள்ளிவாசல் இருந்ததாகவும் அதுவே முஸ்லிம்களது முதலாவது மிகப்பெரிய ஜும்மா பள்ளிவாசல் என்றும் அறியப்படுகிறது. இந்த பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் நின்று தொழக்கூடிய தான பெரிய மண்டபமும் இருந்ததாக அறியக்கிடைக்கின்றது. இந்தப்பள்ளிவாசல் போத்துக்கேயரால் இடிக்கப்பட்டது மட்டுமல்லாது, இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை அடித்து துரத்தப்பட்டனர். இதனால் இம்மக்கள் வடபகுதியின் பல இடங்களுக்கும் பரவலாகச் சென்று குடியேறினர். 1614ஆம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் இடத்தில் பின்பு "பிறே பெட்ரோடி பென்டாக்" என்பவரால் கட்டப்பட்ட தேவாலயம் வெற்றித் திருமகள் ( Our Lady of victory)
தேவாலயம் என அக்காலத்தில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் புதுமை மாதா தேவாலயமாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இலங்கை முஸ்லிம் இனத்தின் வரலாற்றை உற்று நோக்கும்போது அவர்கள் ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் பலமானவர்களினால் துன்புறுத்தப்பட்டே வந்துள்ளனர். போத்துக்கேயர் காலத்தில் மட்டுமல்ல, யாழ்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியன் காலத்தில் 1564ஆம் ஆண்டு முஸ்லிம் மக்கள் யாவுகர் சேரி என்னுமிடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். இந்தக் குறிப்பின்படி யாவுகர் சேரி என ஓர் இடம் இருந்திருக்கிறது என நாம் அறிந்து கொண்டாலும் அந்த இடம் எந்தப் பகுதியில் இருந்தது என போதியளவு ஆய்வு செய்யப்படவில்லை. எனினும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் ஒன்றான சாவகச்சேரிதான் யாவுகர் சேரியோ என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நாவாந்துறையை அண்டிய பகுதிகளிலும் நல்லூர் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்த காலத்தில் தமிழர்களால் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரம் யாழ்பாண வைபவமாலையில் காணக்கூடியதாக உள்ளது.

நல்லூர் கந்தசாமி கோவில் அமைந்துள்ள பகுதிகளில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் இருந்ததற்கான ஆதாரங்களை இன்றும் நாம் காணலாம். போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட பல இந்து ஆலயங்களை ஒல்லாந்தரின் வருகைக்குப்பின் புனருத்தாரணம் செய்ய இந்துக்கள் முயன்றனர். நல்லூர் கந்தசாமி கோவிலைப் புனருத்தாரணம் செய்வதுடன் விஸ்தரிக்கவும் திட்டமிட்ட இந்துக்கள் அதற்கு தடையாக நல்லூரில் இருந்த முஸ்லிம்களைத் துரத்தவும் பள்ளிவாசலை இடிக்கவும் திட்டமிட்டனர். முதலில் அந்த இடங்களை விடும்படியும் அதற்கான பணம் தருவதாக கூறியும் முஸ்லிம்கள் அதற்கு இணங்காததால் இந்துக்கள் முஸ்லிம்கள் பாவிக்கும் குடிநீர் கிணறுகளில் பன்றிகளை வெட்டி அதன் மாமிசங்களைப் போட்டனர். மதத்தால் ஒதுக்கப்பட்ட பன்றி இறைச்சியை இப்படிக் கிணறுகளில் இந்துக்கள் போட்டதால் முஸ்லிம்கள் நல்லூரில் இருந்து நாவாந்துறைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். தமக்கு இந்துக்களால் செய்யப்பட்டக் கொடுமைகளை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டாலும் பெரும்பாண்மையினரை எதிர்க்க வலுவில்லாது அவர்கள் ஒதுங்கிக்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இப்பொழுதும் நல்லூர் கந்தசாமி கோவிலின் மூலஸ்தானத்தின் பின் பகுதியில் முகம்மது இப்ராஹிம் என்னும் பெரியாரின் சமாதி (சியாரம்) உள்ளது என்பதையும் வரலாறுகள் மறுக்கமுடியாது என்பதே உண்மையாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -