பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா?


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பிளாஸ்டிக் வாளிகளையும் மண் வெட்டிகளையும் கொடுத்து மக்களைக் குழப்புவதற்கு வங்குரோத்து நிலை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்று சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அமைச்சர்களிடம் கோல் சொல்லி மக்களுக்கு கிடைக்கவிருக்கும் அபிவிருத்திகளையும் தடுப்பதற்கு இந்த அரசியல்வாதிகள் சதி செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில்;
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியையும் அது மக்களுக்கு செய்து வரும் அபிவிருத்தியையும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.தாங்களே முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைமை என்று கூறிக்கொண்டு திரியும் வங்குரோத்து நிலை அடைந்துள்ள இவர்கள் ஏதாவது செய்து மக்களின் மனங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

மக்களின் தேவை என்னவென்று உணர்ந்து நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் பிளாஸ்டிக் வாளிகளும் மண் வெட்டிகளும்தான் மக்களின் தேவை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.இவற்றைக் கொடுத்து பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாகப் படம் காட்டுகின்றனர்.

எமது சமூகத்தில் சிலர் தமக்கு ஏதாவது கிடைத்தால் சரி என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.சமூகத்துக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பது பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியலை எடுத்துப் பாருங்கள்.அவர்கள் அரசியல்ரீதியாக பிளவுபட்டு நின்றாலும் அனைவரினதும்-அனைத்துக் கட்சிகளினதும் கொள்கை ஒன்றாகவே இருக்கின்றது.அந்த நிலை முஸ்லிம்களிடத்தில் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு எதுவித சேவையும் செய்யக்கூடாது என்று போலியான முஸ்லிம் தலைமைகள் விரும்புகின்றன.நான் புத்தளத்துக்கு சென்று அங்குள்ள வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதை இந்தப் போலித் தலைமையால் சகிக்க முடியவில்லை.

அவர் எனது ஊருக்கு வந்து கேவலம் வாளியும் மண்வெட்டியும் கொடுக்கும்போது நான் புத்தளத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வழங்குவது குற்றமா?மக்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரும் செய்யமாட்டார்;அடுத்தவர்களும் செய்யக்கூடாது என்பதுதான் அவரின் நிலைப்பாடு.இவர்தான் முஸ்லிம்களின் தேசிய தலைமையாம்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை அப்படியே வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் அவரின் திட்டம்.

முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் அமைச்சுக்களின் ஊடாக எவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இவர்களுக்குத் தெரியுமா?எமது அமைச்சுக்களின் ஊடாக நாம் செய்த -செய்து கொண்டிருக்கின்ற ஒரு பணியையாவது இவர்களால் செய்ய முடியுமா?

ஒரு கட்சியின் தலைவர் என்றும் முஸ்லிம்களின் தலைவர் என்றும் கூறிக்கொள்ளும் இவர்கள் 2004 ஆம் ஆண்டுக்கு பின்னால் கொஞ்சம் திரும்பிப் பார்க்கட்டும்.முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லையென்றால் இவர்களால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து இவர்கள் பேச வேண்டும்.

நாம் அமைச்சுக்களை பெற்றிருப்பது அரசியல் செய்வதற்கு மட்டுமல்ல சமூகத்துக்கு சேவை செய்வதற்காகவும்தான்.அதுதான் முக்கியம்.எமது கைகளில் முக்கியமான அமைச்சுக்கள் இருக்கின்றபோது நாம் முடியுமானவரை சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும்.இதை நாங்களே தடுக்கக் கூடாது.

எனது சுகாதார அமைச்சை எடுத்துக்கொண்டால் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை தள வைத்தியசாலைக்கு 100 கோடி பெறுமதியான 55 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடமும் வைத்திய கருவிகளும் வழங்கப்படவுள்ளன.பொத்துவில் தள வைத்தியசாலைக்கு 70 கோடி ரூபா செலவில் 38 ஆயிரத்து 840 சதுர அடி கொண்ட கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு 45 கோடி ரூபா செலவில் 25ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல்,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 180 கோடி ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதோடு 60 கோடி ரூபா பெறுமதியான வைத்திய கருவிகளும் வழங்கப்படும்.

அத்துடன்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளடங்கலாக சகல வசதிகளையும் கொண்ட கதிரியாக்கப் பிரிவொன்று திறக்கப்படவுள்ளது.

மேலும்,380 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட விபத்து மற்றும் அவச சிகிச்சை பிரிவுக்கான கட்டடத் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.

இன்னும்,கண் சிகிச்சை பிரிவு,சிறுவர் சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை கூடம் என்பன உள்ளடங்கலாக 825 மில்லியன் ரூபா பெறுமதியில் 4 மாட்டிகளைக் கொண்ட மருத்துவ விடுதி அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இதற்கான ஆரம்பப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால் அம்மாவட்ட மக்களின் நலன்கருதி இவ்வரசால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அவுஸ்திரேலியா திட்டத்தின்கீழ் 500 மில்லியன் ரூபா செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன்,250 மில்லியன் சத்திரை சிகிச்சை பிரிவு ஒன்று இந்திய அரசின் நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த வைத்தியசாலையில் இருதய நோய் சம்பந்தமான பிரிவு ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டு நிதி நிறுவனம் ஒன்றினால் 250 மில்லியன் ரூபா நுண்கடன் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை ஐரோப்பிய வடிவமைப்பைக் கொண்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு 70 கோடி ரூபா செலவில் 38ஆயிரத்து 840 சதுர அடி கொண்ட கட்டடம் அமைப்பட்டவுள்ள அதே நேரம் நிந்தவூரில் 600 கோடி ரூபா செலவில் சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இவ்வாறு பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதைவிட இன்னும் பல பாரிய வேலைகளை செய்திருக்கின்றோம்.இவ்வாறான வேலைகளை போலி முஸ்லிம் அரசியல்வாதிகளால் செய்ய முடியுமா?அவர்கள் வழங்கும் பிளாஸ்டிக் வாளிகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் எமது அபிவிருத்திப் பணிகள் ஈடாகுமா?

மக்கள் இந்தப் போலி சேவைகளுக்கு மயங்கிவிடக்கூடாது.சிந்தித்து செயற்பட வேண்டும்.வாளிகளையும் மண்வெட்டிகளையும் அதிகமாகக் கொடுத்தால் அது பாரிய சேவை என்றாகிவிடுமா?மக்களின் தேவை இந்த வாளிகளும் மண்வெட்டிகளும்தானா?


முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் அமைச்சுக்களின் ஊடாக செய்துவருகின்ற அபிவிருத்தி பணிகளில் ஒன்றையாவது இவர்கள் கிழக்கில் செய்திருக்கிறார்களா?இல்லை.ஆகவே,இவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

வாளிகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் ஏமாந்துவிடாது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.முஸ்லிம்களின் உரிமைக் குரலாக முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு முஸ்லிம்களின் தேசிய தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த போலி அரசியல்வாதிகளின் சதிக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது.-என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -