"அம்மாவின் மரணம்... ஆறு வருட பிரேக்... மீண்டும் கம்பேக்!" - நடிகை


"திட்டமிட்டு எந்த முயற்சியும் செய்யலை. எப்போதும்போல சாப்பாடு, தூக்கம், வழக்கமான செயல்பாடுகள்தான். ஆனால், ஆக்டிங்ல பிரேக் எடுத்த கொஞ்ச காலத்திலேயே, தானாக உடல் எடை குறைய ஆரம்பிச்சது."

"என்னைப் பார்க்கும் ரசிகர்கள், 'மீண்டும் எப்போ நடிப்பீங்க?'ன்னு கேட்கிறாங்க. அந்த அன்பை நினைச்சு சந்தோஷப்படறேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் நடிக்கப்போறேன்" என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை காவேரி. 'மெட்டி ஒலி', 'தங்கம்' உள்ளிட்ட சீரியல்களால் புகழ்பெற்றவர்.

"எதனால் இந்த இடைவெளி ஏற்பட்டுச்சு?"

"ஆறு வருஷத்துக்கு முன்னாடி, 'வம்சம்' சீரியலில் நடிச்சுட்டிருந்தேன். அப்போதான் என் அம்மாவுக்கு கேன்சர் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாம இருந்துச்சு. ஹாஸ்பிட்டல், ஷூட்டிங் என மாறி மாறி அலைஞ்சுட்டு இருந்தேன். ஒருகட்டத்துல அம்மா இறந்துட்டாங்க. அவங்க மேல அளவுகடந்த அன்பை வெச்சிருந்தேன். அவங்க இழப்பைத் தாங்கமுடியாம ரொம்பவே உடைஞ்சுட்டேன். ஆக்டிங்ல ஈடுபாடு செலுத்த முடியலை. அதேசமயம், எனக்குக் கல்யாணமாச்சு. அதனாலும் நடிப்புக்கு பிரேக் கொடுத்தேன்."

" 'தங்கம்' சீரியலில் இளவஞ்சியாக கலக்கிய அனுபவங்கள் பற்றி..."

" 'வம்சம்' சீரியலுக்கு முன்னாடி நடிச்சது தங்கம் சீரியல். வித்தியாசமான வில்லி ரோல். தன் தாய்மாமா சொத்தை, அவரின் இரண்டாம் மனைவியின் குடும்பம் அனுபவிக்கக் கூடாதுனு சதிசெய்யும் ரோல். கூடவே, பயங்கரமா காமெடியும் செய்வேன். அதனால், க்யூட் வில்லினு கூப்பிடுவாங்க. எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைப் புதிய பரிமாணத்தில் வெளிக்காட்ட, அந்த சீரியல் இயக்குநர் நல்ல வாய்ப்பு கொடுத்தார். அந்த கேரக்டருக்காக, 'சிறந்த வில்லி', 'சிறந்த காமெடி நடிகை' என இரண்டு சன் குடும்பம் விருதுகளை வாங்கினேன். இப்பவும் எங்கே போனாலும் இளவஞ்சி கேரக்டரைப் பற்றி மக்கள் பேசறாங்க."


"இப்போ ரொம்பவே எடை குறைஞ்சு இருக்கீங்களே. எப்படி?"


"திட்டமிட்டு எந்த முயற்சியும் செய்யலை. எப்போதும்போல சாப்பாடு, தூக்கம், வழக்கமான செயல்பாடுகள்தான். ஆனால், ஆக்டிங்ல பிரேக் எடுத்த கொஞ்ச காலத்திலேயே தானாக உடல் எடை குறைய ஆரம்பிச்சது. உடம்புல ஏதாச்சும் பிரச்னையா இருக்குமோனுகூட நினைச்சேன். என் மாமனார் டாக்டர். மெடிக்கல் செக்கப் பண்ணினோம். எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டாங்க. மாமனார், மாமியார், கணவர் என எல்லோருக்கும் என் மேலே ரொம்ப அக்கறை. தானாக உடல் எடை குறைஞ்சதில் நானும் புத்துணர்வுடன் இருக்கேன்."

"கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ரொம்ப நல்லா போகுது. கணவர் ராக்கேஷ் ராவ், சோலார் பிசினஸ் பண்றார். கணவர், மாமனார், மாமியார் மூவரின் ஆதரவாலும் அன்பாலும்தான் அம்மாவின் இழப்பைக் கடந்துவந்தேன். குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்திட்டிருக்கேன். தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கிறதைவிட, அப்பப்போ சின்ன பிரேக் எடுத்து நடிச்சா, அந்த கேரக்டர் மக்கள் மனசுல ரீச் ஆகும்ன்றது என் எண்ணம். சில வருஷ இடைவெளிக்குப் பிறகு, 'தங்கம்' சீரியலில் நடிச்சேன். இப்போ வாய்ப்புகள் வருது. சில டைரக்டர்கள், 'இளவஞ்சி' கேரக்டர் மாதிரி வெயிட் போட சொல்றாங்க. 'பலரும் ரொம்ப மெனக்கெட்டு, ட்ரீட்மென்ட் எடுத்து எடையைக் குறைக்கிறாங்க. எதுவும் செய்யாமலே குறைஞ்சிருக்கு. ஒரு கேரக்டருக்காக வெயிட் போட்டுட்டு, இன்னொரு கேரக்டருக்கு குறைக்கச் சொன்னால் சிரமம்தானே!'னு கணவர் சொல்றார். அதுவும் சரிதானே! இப்போதைய என் தோற்றத்துக்கு ஏற்ற, மக்கள் மனசுல இடம்பிடிக்கிற மாதிரியான ரோலாக வந்தால் ஓகே. விரைவில் ஒரு சீரியலில் என் நடிப்பைப் பார்க்கலாம்."

"சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லையா?"

" 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில், பிரசாந்த் ஜோடியா அறிமுகமானேன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிச்சேன். தூர்தர்ஷனின், 'அந்த ஒரு நிமிஷம்' சீரியல் மூலமாக சின்னத்திரை என்ட்ரி கொடுத்தேன். நிறைய சீரியல்களில் நடிச்சாலும், 'மெட்டி ஒலி' பெரிய பிரேக் கொடுத்துச்சு. நல்ல கேரக்டர்களில் நடிக்கணும்; மக்கள் மனசுல இடம்பிடிக்கணும். இதுதான் என் ஒரே எண்ணம். அது, சீரியல்களில்தான் நடந்துச்சு. சினிமாவோ, சீரியலோ... பவர்ஃபுல்லான ரோல் வந்தால் நிச்சயம் நடிப்பேன்." என்கிறார் இந்த க்யூட் வில்லி!






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -