தென் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம்: வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்!


அண்மைக் காலமாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் குறித்தும் தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்து ஆராய்ந்தபோது கிடைக்கப் பெற்ற தகவல்களை மையமாகக் கொண்ட தொகுப்பே இது.
தொகுப்பு: அல்முஹாஜிர்-

பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களும் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரான பின்னணியும்:

2015இல் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் உத்தியோகபூர்வமாக கோரப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கிறார் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம். அன்றைய ஆளுகை சபையினால் சிபாரிசு செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மூவரில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமும் ஒருவர். கூடுதல் வாக்குகளைப் பெற்றவரும் அவர்தான். அதனைப் பரிசீலித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களை சிபாரிசு செய்தபோதும் குறித்த மூவரது பெயர்களையும் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து இறுதித் தீர்மானத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது. பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களே உபவேந்தராக தெரிவுசெய்யப்பட வேண்டுமென்பது இறை நாட்டம். பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்ற அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை தெரிவுசெய்கிறார். 2015 ஜூன் 22ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பல்கலைக்கழகம் நுழைகிறார் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம்.

புதிய உபவேந்தரின் தோளில் இரண்டு பாரிய பொறுப்புக்களை சுமத்தியது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு. அவை இரண்டும் பிரதான பணியாக அமைய வேண்டுமெனவும் வலியுறுத்தியது.

01. பல்கலைக்கழக ஊழல், மோசடிகளை இல்லாதொழித்தல்

02. பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆய்வுச் சூழலை மேம்படுத்துதல்


நீங்களும் சேர்ந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டால் தண்டனை நிச்சயம் என்ற எச்சரிகையையும் விடுத்தது UGC.

இரண்டு பிரதான பொறுப்புக்களைச் சுமந்தவாறு ஆசனத்தில் அமர்ந்தார் பேராசிரியர் நாஜிம்.

ஏன் இந்த எதிர்ப்பும் கொந்தளிப்பும்:
பேராசிரியர் நாஜிம் கள நிலைவரங்களை நன்கு அவதானித்தார். நடப்பதை கூர்ந்து நோக்கினார். நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொண்டார்.

அவர் பதவியேற்றபொழுது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இவரை இங்கிருந்து துரத்தி விடுவோம் என்று சிலர் சவால் விடுத்தனர். பின்னர் மூன்று மாத காலம் என்றனர். ஆறு மாத காலம் போதும் என்றனர். ஒரு வருடத்திற்குள் இவரை இந்தப் பதவியிலிருந்து தூக்கி விடுவோம் என்றனர். பதவியேற்று இரண்டரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இரண்டாம் தடவையாக இவரைப் பதவியேற்க விட மாட்டோம் என கங்கணங்கட்டி செயல்படுகின்றனர்.

ஏன் அவர்கள் இவ்வாறு கொந்தளித்தனர்? மீண்டும் மீண்டும் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?

உபவேந்தர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்மீது சுமத்திய இரண்டு பிரதான பொறுப்புக்களையும் நிறைவேற்றும் முயற்சியில் படிப்படியாக இறங்கியமைதான் இந்தக் கொந்தளிப்புக்கான காரணம்.

மூன்று மாதங்களுக்குப் பின் பல்கலைக்கழகத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு வந்த சிறு கும்பலின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஊழல், மோசடிகளுக்கான வாசல்கள் மெதுமெதுவாக மூடப்பட்டன. சிறு சிறு துளைகளும் மெல்ல அடைக்கப்பட்டன. சுற்றுநிருபங்களுக்கமைய, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கமைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிதிசார் விதிமுறைகள் (Financial Regulations) மற்றும் நிர்வாகம்சார் விதிமுறைகள் (Administrative Regulations) முறையாக கையாளப்பட்டன. ஓர் ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டன.

விளைவாக, வயிறு வளர்த்து வந்தவர்கள் திடுக்கிட்டனர். ஆவேசப்பட்டனர். எதிர்க்கத் துவங்கினர். எதிர்ப்பு அனாமேதய கடிதங்களில் ஆரம்பித்தது. கொலை அச்சுறுத்தல் விடுத்தனர். வேண்டுமென்றெ விபத்தை ஏற்படுத்திக் கொல்வதாக மிரட்டினர். நஞ்சு வைத்துக் கொல்வோம், நடுத் தெருவில் வைத்து சுடுவோம், முழுக் குடும்பத்தையும் கொன்று விடுவோம், பிள்ளையைக் கடத்துவோம், பாதாள உலக கோஷ்டியினரை வைத்து கதையை முடிப்போம்… என்று நாளுக்கு நாள் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர் அனாமேதய கடிதங்கள் மூலமாக. கடிதங்கள் மின்னஞ்சலுக்கூடாகவும் தபால் மூலமாகவும் வந்து சேர்ந்தன.

ஆனால், அவர் எதற்கும் அஞ்சவில்லை. பின்வாங்கவுமில்லை. அவரது மனைவி உட்பட குடும்பத்தினரும் கொலை அச்சுறுத்தலுக்கு மசியவில்லை. இறைவன் மீது தவக்குல் வைத்தவராக தனது பணிகளை முன்னெடுத்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தார். உயர் கல்வி அமைச்சுக்கும் பொலிஸ் மாஅதிபருக்கும் விடயத்தை நகர்த்தியது UGC.

இதேவேளை கடந்த நிர்வாகத்தில் நிகழ்ந்த ஊழல், மோசடிகள் குறித்து இவர் பதவியேற்பதற்கு முன்னரேயே முன்னாள் உபவேந்தருக்கு எதிராக 15 பக்கங்களில் Executive summary உம் (நிர்வாகச் சுருக்கம்), 197 பக்கங்களில் Annexures (பின்னிணைப்புகள்) உமாக 212 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டு அறிக்கை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (Financial Crimes Investigation Division- FCID) சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக கடந்த கால நிதிசார் கணக்குகள் தொடர்ந்தேர்ச்சியான உள்ளக மற்றும் வெளியக மீளாய்வுக்கு (Audit) உட்படுத்தப்பட்டன. 2013, 2014, 2015… என்று தொடர்ந்தேர்ச்சியாக கணக்காய்வு இடம்பெற்று அவற்றுக்கு முறையாக பதிலளிக்குமாறு கோரி அறிக்கைகள் வந்திருந்தன. அவற்றில் பலவற்றுக்கு பதிலளிக்க முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறு பதிலளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் Audit குழு இருக்கவில்லை. இதனால் அந்த அறிக்கைகள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (COPE -Committee on Public Enterprises) சென்றன. அவற்றைப் பரிசீலித்த கோப் குழு, ஒரு சுதந்திர ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை புலனாய்வு செய்வதனூடாக உண்மைத்தன்மையை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டது. அதன் பின்னரேயே முன்னாள் உபவேந்தரின் நிர்வாக கால ஊழல், மோசடிகள் குறித்த புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வுச் சூழலை மேம்படுத்துவதே அவருக்கு வழங்கப்பட்ட அடுத்த இலக்கு. அடுத்த பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்வி நடவடிக்கைகள் சுமார் எட்டு மாதங்கள் பின்தங்கியிருந்தன. சமகாலத்தில் வேறு பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசித்த மாணவர்கள் பட்டம் பெற்று ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குப் பின்னரே தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறும் நிலை காணப்பட்டது. இதனை சீர்செய்யும் முயற்சியில் இறங்கியது பேராசிரியர் நாஜிம் தலைமையிலான நிரவாகம். விளைவாக 15 வாரங்களை உள்ளடக்கிய ஒரு தவணை (semester) 13 வாரங்களாக குறைக்கப்பட்டது. ஒவ்வொரு தவணைக்குப் (semester) பின்னரும் வழங்கப்பட்டு வந்த விடுமுறையும் குறைக்கப்பட்டது. மூன்று வருடங்களில் பூரணப்படுத்த வேண்டிய கற்கைநெறியை இரண்டரை வருடங்களுக்குள் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் கல்வித் துறை ஊழியர்கள் ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலனவர்கள் அர்ப்பண சிந்தையுடன் பணியாற்றினர். பெரும்பாலான நிர்வாகத் துறை ஊழியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சிறப்பான ஒத்துழைப்பு நல்கியபோதும் சிலர் இந்த மாற்றங்களால் அதிருப்தி அடைந்ததும் உண்மை.

அவ்வாறே 80 வீத வரவைப் பெறத் தவறும் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமை சகல பல்கலைக்கழகங்களிலும் உள்ள பொதுவான சட்டம். இந்த சட்டமும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமுலில் இருக்கவில்லை. எந்தவொரு விரிவுரைக்கும் சமுகமளிக்காத மாணவர்கள்கூட பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டனர். பேராசிரியர் நாஜிம் அவர்களின் வருகைக்குப் பிறகு இந்த சட்டமும் துல்லியமாக அமுல்படுத்தப்பட்டது. சுற்றறிக்கைகள் கிடப்பில் போடப்படவில்லை. படிப்படியாக அமுலுக்கு வந்தன. எவருக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. அவ்வப்போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தண்டனைகள் வழங்கப்பட்டன. Establishment code மற்றும் Circulars களின் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் செயற்பட்டது. இதனால் “சுற்றறிக்கை உபவேந்தர்” என்ற பட்டப் பெயரும் அவருக்கு சூட்டப்பட்டது. இந்த நடவடிக்கையும் பல்கலைக்கழகத்தில் பெரும் சர்ச்சையை, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஊழலுக்கான கதவுகள் மூடப்பட்டமை, விடுமுறைகள் குறைக்கப்பட்டு செமஸ்டர் சிஸ்டம் ஒழுங்குபடுத்தப்பட்டமை என்பவற்றினால் அதிருப்தியடைந்திருந்த சில விரிவுரையளர்கள் 80 வீத வரவைப் பெறாத மாணவர்களைத் தூண்டி விட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டாது வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த சில மாணவர்களும் அவர்களோடு கை கோர்த்தனர். ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வகுப்பு பகிஷ்கரிப்புகள் இடம்பெற்றன. கல்வி நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும் நிர்வாகம் அவற்றையெல்லாம் மிகக் கவனமாக கையாண்டது. விரிவுரைகள், வகுப்புகளுக்கு சமுகமளிக்காது, கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடாது வெறுமனே பரீட்சைகளுக்குத் தோற்றி பட்டம் பெறுகின்ற மாணவர்களால் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாதிப்பே ஏற்படுகின்றது என்பதனால் அந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டியது நிர்வாகம். இதனால் கல்வி நடவடிக்கைகளிலும் கணிசமானளவு மாற்றம் ஏற்பட்டன. சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டர். மாணவர்களும் விரிவுரையாளர்களும் மனத் திருப்தியுடன் கற்றல்- கற்பித்தலை மேற்கொள்ளும் நிலை உருவானது.

மறுபக்கம் பல்கலைக்கழக வளாகத்தில் அதிகரித்துவந்த பகிடிவதைக்கு (Ragging) எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது அதில் ஈடுபட்டு வந்த மாணவர்களும் நிர்வாகத்திற்கு எதிராக செயற்பட முயற்சித்தனர். ஏற்கனவே ஊழலுக்கான கதவுகள் மூடப்பட்டமை, விடுமுறைகள் குறைக்கப்பட்டு செமஸ்டர் சிஸ்டம் ஒழுங்குபடுத்தப்பட்டமை, 80 வீத வரவு பார்க்கப்பட்டமை என்பவற்றினால் அதிருப்தியடைந்திருந்த சில விரிவுரையளர்கள் இம்மாணவர்களைத் தூண்டி விட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர். மீண்டும் ஆர்ப்பாட்டங்களும் வகுப்பு பகிஷ்கரிப்புகளும் ஆரம்பித்தன. இதன் மூலம் நிர்வாகத்திற்கும் உபவேந்தருக்கும் அழுத்தம் கொடுத்து உபவேந்தரை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்தது. எனினும், அல்லாஹ்வின் அருளால் அவர்களது சதிமுயற்சிகள் தோல்வி கண்டன.

அதேவேளை ஒரு சிலரால் சில பெண் ஊழியர்களும் சில மாணவிகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமையும் நிர்வாகத்திற்கு தெரிய வந்ததையடுத்து அதற்கெதிராகவும் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்தது.

இது போன்ற முன்னெடுப்புகளை சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில விரிவுரையாளர்களையும் ஒரு சில கல்விசாரா ஊழியர்களையும் கொண்ட ஒரு சிறிய குழு தொடர்ந்தும் நிர்வாகத்திற்கும் உபவேந்தருக்கும் எதிராக செயற்பட்டு வருகிறது; அச்சுறுத்தி வருகிறது; உபவேந்தரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோரும் ஊழலில் ஈடுபடுவதாக பொய்யான முறைப்பாட்டு மனுக்களை (Petitions) அனுப்பி வருகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் தலைமை அதிபதி (Auditor General), பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், பிரதமர், மேதகு ஜனாதிபதி… என்று சகலருக்கும் பெட்டிஷன்ஸ் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வாரத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட பெட்டிஷன்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்.

இந்த முயற்சிகளும் பலனளிக்காததனால் அவர்கள் வேறு முயற்சியில் ஈடுபடத் துவங்கினர். அதுதான் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் பிராந்திய, தேசிய இணையதளங்களில் உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் குறித்து அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்பி வருவதாகும். இதன் மூலமாவது அழுத்தத்தைப் பிரயோகித்து மானசீக ரீதியில் பாதிப்படையச் செய்து உபவேந்தரை துரத்திவிட்டு நிர்வாக ரீதியாக பலவீனமான ஒருவரை அந்தப் பதவிக்கு அமர்த்தி தமது நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்த முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களது இலக்கு என தெரிவிக்கின்றது பல்கலைக்கழக வட்டாரம்.

தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் முதல் தடவைக்கான பதவிக் காலம் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதியுடன் அவரது முதலாவது தவணைக்கான பதவிக் காலம் நிறைவடையவிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முதல் தவணையோடு இவரை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகவே சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் தமது கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.

கடந்த முறை உபவேந்தருக்கான தேர்தல் 2015 மே மாதம் 11ஆம் திகதியே நடைபெற்றது. அவ்வாறே இம்முறையும் அந்தத் தேர்தல் மே மாதத்திலேயே நடைபெற வேண்டும். ஆனால், உபவேந்தர் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்ட சிறு குழுவினர் மார்ச் மாதத்தில் நடத்துமாறு வேண்டுகின்றனர்.

பல்கலைக்கழக ஆளுகை சபையின் உள்ளக அங்கத்தவர்களாக உபவேந்தர், ஆறு பீடங்களினதும் (Deans of Faculties) பீடாதிபதிகள், University Senate மூலம் நியமிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட வெளியக உறுப்பினர்கள் 10 பேருமாக மொத்தம் 19 பேரைக் கொண்ட சபையே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆளுகை சபையாகும். 2015 ஏப்ரல் மாதத்திலேயே அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆளுகை சபை அங்கத்தவர்கள் 10 பேரும் நியமிக்கப்பட்டார்கள். இம்முறையும் ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்படுகின்ற புதிய ஆளுகை சபை உறுப்பினர்கள் 10 பேரும் நியமிக்கப்படுவர். இத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமானால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் புதிய ஆளுகை சபையின் கண்காணிப்பிலேயே அடுத்த தவணைக்கான உபவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய உபவேந்தர் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிருப்தி கொண்ட சிறு குழுவினர் அதனை மார்ச் மாதத்தில் தற்போதுள்ள ஆளுகை சபையின் கீழ் நடத்துமாறு கோரி சகல மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்கின்றனர். உபவேந்தர் தேர்தலுக்கான செயன்முறையை அவசரப்படுத்துமாறு கோருகின்றனர். அதற்கான செயன்முறைகளை பல்கலைக்கழக நிர்வாகம் முறையாக மேற்கொண்டு வரும் நிலையில் இதனை அவரசரப்டுத்துமாறு அழுத்தம் கொடுப்பதற்குப் பின்னால் வேறு நோக்கங்கள் இருப்பது தெளிவாகிறதல்லவா?

கடந்த கால ஊழல் முறைப்பாடுகள் COPE (Committee on Public Enterprises) இல் உள்ளதனால் அவை முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் அந்த விசாரணை செயன்முறைகளுக்கு தற்போதைய உபவேந்தர் ஒத்துழைப்பு வழங்குவதனாலும் இவர் இரண்டாம் தவணைக்கான உபவேந்தராக வந்துவிடக்கூடாது என்பதே அவர்களின் இலக்காகும்.

கடந்த கால ஊழல்கள் கணக்காய்வின் (Audit) மூலம் கண்டறியப்பட்டதே ஒழிய தற்போதைய உபவேந்தர் அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பதும் பலரும் அறிந்த உண்மையாகும்.

தவிரவும் தற்போதைய உபவேந்தர் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர், இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்காதவர் என்றும் இதனால் இவர் முஸ்லிம் மாணவர்களை விட சிங்கள மாணவர்கள் மீதே கரிசனை செலுத்துகிறார் என்றும் குறித்த அந்த குழுவினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர். தற்போதும் முன்வைத்து வருகின்றனர். பின்னர் பகிடிவதையின்போது சிங்கள மாணவர்கள் பலர் தண்டிக்கப்பட்டபோது இவர் சிங்கள மாணவர்களோடு கடுமையாக நடந்து கொள்கின்றார் என்று குற்றம் சுமத்தினார்கள். இப்படி பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் குறித்த அந்தக் குழுவினர் பல்கலைக்கழக கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற ஒரு தேசிய பல்கலைக்கழகமாகும். இதில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள் எந்த இனத்தை, சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் முறையாக கிடைக்கப் பெற வேண்டும். ஒவ்வோர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தத்தமது சமயக் கிரியைகளை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே இன, மத, குல, பிரதேச பேதங்களுக்கு அப்பால் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க வேண்டியது உபவேந்தரின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர் தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வருகிறார்.

பேராசிரியர் நாஜிம் அவர்களது நிர்வாகத்திற்கு முன்பிருந்தே பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெண்கள் விடுதி கட்டிடத் தொகுதி (Girls Hostel Complex) இருந்து வருகிறது. ஆனால், அந்த விடுதிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கவில்லை. பாதுகாப்பான ஜன்னலோ சுற்றுமதிலோ வாயிற் கதவோ காணப்படவில்லை. மாணவிகள் தாம் நினைத்த நேரத்திலெல்லாம் விடுதிக்கு வந்து கொண்டிருந்தனர். இவரது நிர்வாகத்திலேயே சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டு வாயிற் கதவு பொருத்தப்பட்டு இரவு 7 மணிக்கு முன்னர் மாணவிகள் விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்ற சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தைச் சாராத ஒருவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருக்கக் கூடாது என்றும் அந்தச் சிறு குழுவினர் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் “நம்மவரைக் கொண்டு நம்மை ஆளுவோம்” என்று கோஷம் எழுப்பி பிரதேசவாதத்தைத் தூண்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் உபவேந்தராக இருக்க வேண்டுமென்றோ அந்தந்த பல்கலைக்கழகத்தில் கற்றவர்தான் அதன் உபவேந்தராக வர வேண்டும் என்றோ சட்டம் கிடையாது. அப்படியொரு நடைமுறையும் நாட்டில் இல்லை.

அவ்வாறே விரிவுரையாளர், ஊழியர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றபோது தராதரமுள்ள எவரும் அதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகப் பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்துபவர் தெரிவுசெய்யப்படுவார். இதுதான் ஒழுங்கு. அந்த ஒழுங்குமுறைக்கு அப்பால் சென்று விரிவுரையாளர் பதவி கேட்டு வந்த ஒருவருக்கு பின்கதவால் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் உபவேந்தருக்கும் நிர்வாகத்திற்கும் எதிராக செயற்படுகிறார் என்றும் அறியக் கிடைத்தது.

தற்போதைய அரசாங்கம் பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை உள்வாங்குவதில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதில்லை. உயர் கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக உள்ளார்ந்த நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. இதனால் உபவேந்தரும் நிர்வாகமும் சுதந்திரமாக இயங்கும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போதைய உபவேந்தரோ அல்லது அவரோடு பணியாற்றும் நிர்வாக உறுப்பினர்களோ ஊழல் மோசடிகளில் ஈடுபாட்டால் அல்லது முறையற்ற விதத்தில் நிர்வாகத்தை வழிநடத்தினால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை அரசாங்கம் முறையான பொறிமுறைக்கூடாக நடைமுறைப்படுத்தும். அதனை விடுத்து சமூக வலைத்தளங்களில், இணையதளங்களில் இது பற்றி போலிப் பிரசாரம் செய்வது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் பெரும் துரோகமாகும். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் முயற்சியாகும்.

குற்றச்சாட்டுகளும் புரளிகளும்:

இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடந்த 06.02.2018 அன்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி பகிரங்கமாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியது. அதன் உண்மைத் தன்மை குறித்தும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தரும் தகவல்களையும் நோக்க வேண்டுமல்லவா?

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து வந்த நிதி ஒதுக்கீடுகள், தற்போதைய உபவேந்தரின் பதவிக் காலத்தில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார். 2015ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 772 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்ததாகவும், ஆனால் 2018ஆம் ஆண்டு 300 மில்லியன்களாக அந்த நிதியொதுக்கீடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, குவைத் நாட்டிலிலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து வந்த நிதியில், 1700 மில்லியன் ரூபாய், வேறு பல்கலைக்கழகமொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. உபவேந்தரின் செயற்திறனற்ற நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


முதலில் 2015ஆம் ஆண்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அரசாங்கத்திடமிருந்து 772 மில்லியன் கிடைக்கப் பெற்றதாக கூறுவது கலப்படமற்ற பொய் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 2015இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு capital grants ஆக கிடைக்கப் பெற்ற தொகை 260 மில்லியன்கள் மாத்திரமே. அவ்வாண்டில் வேறு எவ்வித நிதியும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.

அரசாங்கம் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கம் வருடாந்தம் ஒரே மாதிரி நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அது அரசாங்கத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து கூடிக் குறையும். இது எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானது.

உதாரணமாக 2016இல் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 583 மில்லியன் ஆகும். அதற்கு 2018இல் 400 மில்லியன்களே ஒதுக்கப்பட்டுள்ளன. ருஹுனு பல்கைலைக்கழகத்துக்கு 2016இல் 847 மில்லியன்களும் 2017இல் 700 மில்லியன்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு 2018இல் 500 மில்லியன்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி ஒதுக்கீடுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர் பொறுப்பல்ல. இது அரசாங்கத்தின் தீர்மானம் என்பதைப் இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

மட்டுமன்றி, பொதுவாக பல்கலைக்கழகங்களுக்கு capital grants மற்றும் Recurrent Grants என இரண்டு வழிமுறையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறுகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை 2016இல் capital grants க்கு மாத்திரம் 426 மில்லியன்களும் 2017இல் 400 மில்லியன்களும் 2018இல் 300 மில்லியன்களும் கிடைத்திருக்கின்றன. 2018 இல் capital grants க்கு கிடைத்த 300 மில்லியன் போக Technology stream க்கு என மேலும் 300 மில்லியன்கள் கிடைத்திருக்கின்றன. இவை தவிர 2018இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இரண்டு Project களுக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. Staff Quarters க்கு 340 மில்லியன்களும் மல்வத்த செயற்திட்டத்திற்கு 160 மில்லியன்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவ்வாறே 2017இல் தொழில்நுட்ப பீடத்தின் கட்டிடத்துக்கு வேறாக 450 மில்லியன்கள் கிடைத்திருக்கின்றன.

இவ்வாறு நிதி ஒதுக்கீடுகள், விஷேட செயற்திட்டங்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த உண்மைகளையெல்லாம் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மூடி மறைத்து உபவேந்தருக்கு சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் வெறும் அபாண்டங்களைக் கூறுவதும் பொது மக்களை பிழையாக வழிநடத்துகின்ற செயலல்லவா?

பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களின் காலத்தில்தான் இந்த குவைத் செயற்திட்டம் (Project) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப்பெற்றது. குவைத்திலிருந்து இந்த செயற்திட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்குப் பெற்றுத் தருவதில் மூவர் பங்களிப்புச் செய்தனர். அவர்களில் ஒருவர் இரண்டாவது உபவேந்தர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல். அடுத்தவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மன்ஸூர். மற்றவர் திருமதி பேரியல் அஷ்ரஃப். குவைத் நிதியிலிருந்து Phrase 1 A, Phrase 1 B என்ற அடிப்படையில் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. Phrase 1 B இன் இறுதிக் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை இவ்வருடம் நிறைவடையவுள்ளன. இந்நிலையில் உபவேந்தர் நாஜிம் தலைமையிலான பல்கலைக்கழக நிர்வாகம் Phrase 2 க்கான குவைத் நிதியைப் பெறுவதற்கான திட்ட வரைவென்றை (Proposal) அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது.

பேராசிரியர் நாஜிமுக்கு முன் இருந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயீல் காலத்தில் Phrase 2 க்கான நிதியைப் பெறுவதற்கான திட்ட வரைவென்று சமர்ப்பிக்கப்படவில்லை. Phrase 1 இற்கான வேலைத் திட்டங்கள் முடிவடையும் தருணத்தை அடைந்தபோதும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயீல் அவர்களால் Phrase 2 க்கான குவைத் நிதியைப் பெறுவதற்கான Proposal தயாரிக்கப்பட்டிருக்கவுமில்லை. பேராசிரியர் நாஜிம் அவர்களே அந்த Proposal ஐத் தயாரித்து அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவிரவும் குவைத் மூலம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட நிதி வேறு பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டன. குவைத் அரசாங்கம் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மாத்திரம் குறித்த அந்த தொகையை வழங்கவில்லை. அதிலிருந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கணிசமானளவு நிதி கிடைத்துள்ளது. இதனை அரசாங்கதிடமிருந்து பல்கலைக்கழகம் பெற வேண்டும். ஆசிரியர் சங்கம் கூறுவது போன்று 1700 மில்லியன்கள் நேரடியாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திக்கு கிடைக்கப் பெறவில்லை. மொத்தமாக கிடைத்த பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பிச் சென்றுள்ளதாக அதனை திரித்துக் கூறி, பொது மக்களை பிழையாக வழிநடத்துகிறது ஆசிரியர் சங்கம்.

குவைத் Project என்பது, குவைத் அரசாங்கத்தினால் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட ஒரு நீண்ட கால கடன். அந்த வகையில் Phrase 1 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது. Phrase 2 க்கான திட்டவரைவு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வேறு பல்கலைக்கழகங்களும் அந்த நிதியிலிருந்து தமக்கு உதவுமாறு கோரி proposal களை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன. உயர் கல்வி அமைச்சு பல்கைலைக்கழக தேவைகளைக் கண்டறிந்து அந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்கிறது. உயர் கல்வி அமைச்சின் திறைசேரி பகுதியில் இது தொடர்பான விபரங்களைப் பெறலாம். இந்த யதார்த்தத்தைப் புரியாது தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப் பெற்ற 1700 மில்லியன் திரும்பிப் போய் விட்டதாக கூறுவது சுத்தமான அபாண்டமல்லவா?

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் 09வது இடத்தில் இருந்ததாகவும் தற்போது 15வது இடத்துக்கு பின்னதள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கான முழுப் பொறுப்பும் தற்போதுள்ள உபவேந்தரையே சாரும் என்பதும் ஆசிரியர் சங்கத்தினரின் அடுத்த குற்றச்சாட்டு.

இவ்விடயத்தைப் பொறுத்தவரை, இது பல்கலைக்கழக இணையதளத்தை மையமாக வைத்து பல்கலைக்கழக தரப்படுத்தல் குறித்து சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டாகும். அதாவது பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனோடு தொடர்பான இன்னும் சில நியமங்களைப் பொறுத்து இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. இது Webometrics Ranking of Universities அல்லது Ranking Web of Universities என அழைக்கப்படுகிறது.

இந்த தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேறு பெரிய பல்கலைக்கழகங்கள் தமது இணையதளத்தை வடிவமைத்து பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடும் வகையில் அதனை சந்தைப்படுத்தினர். ஒப்பீட்டு ரீதியில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் சிறிய ஒரு பல்கலைக்கழகம். மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. பெரிய பல்கலைக்கழக பயனர்களின் (Users) எண்ணிக்கை அதிகம் என்பதனால் அவை தரப்படுத்தலில் முன்னணி வகிக்கின்றன. இது ஒரு காரணம்.

Webometrics தரப்படுத்தலில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் பின்தள்ளப்பட்டமைக்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது. Webometrics தரப்படுத்தலில் Number of Google Scholar Citations என்ற பகுதியில் Excellence Rank, Presence Rank, Impact Rank, Openness Rank என நான்கு நியமங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்படுகின்றன. அதில் Excellence Rank ஐப் பொறுத்தவரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் 5777 வது இடத்தில் இருக்கிறது.

தென் கிழக்கு பல்கலைக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Google Scholar Citations களைப் பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான Citations கைளைப் பெறுவதற்கு முக்கியமாக ஆறு பேரே பங்களிப்புச் செய்து வருகின்றனர். Google Scholar Account களை வைத்திருப்போர் அதில் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிப்பதன் மூலமே Citations களை அதிகரிக்க முடியும்.

பேராசிரியர் அப்துல் ஹுஸைன்மியா – 341 Citations

கலாநிதி முஸாதிக் அப்துல் மஜீத்- 305 Citations

பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம்- 232 Citations

கலாநிதி கே. கோமதிராஜ்- 231 Citations

கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன்- 204 Citations

கலாநிதி எம்.ஐ. மொஹிதீன் பாவா- 91 Citations

மேற்குறிப்பிட்ட ஆறு பேரும் பெற்றுள்ள Citations களின் எண்ணிக்கை 1404 ஆகும். Google Scholar Account வைத்திருக்கும் மிகுதி 50 பேரும் சேர்ந்து 582 Citations களையே பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மிகுதி விரிவுரையாளர்களுக்கு Google Scholar Account கிடையாது. இதன் காரணமாகவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ளது. எனவே, இதற்கு விரவுரையாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். அதேநேரம் குறித்த Google Scholar Account களை திறக்குமாறும் Citations களைப் பெறுமாறும் விரிவுரையாளர்களை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நிர்ப்பந்திக்க முடியாது. இது ஒவ்வொரு விரிவுரையாளரும் மேலதிகமாக மேற்கொள்ள வேண்டிய பணி. வேறு பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் Google Scholar Account களை வைத்திருப்பதோடு கணிசமானளவு Citations களையும் பெற்றுள்ளனர். இதனால் அந்தப் பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன. Webometrics தரப்படுத்தலில் அடுத்த நியமங்களின் அடிப்படையில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் முன்னணியில் இருந்தாலும் Excellence Rank இல் மிகவும் பின்தங்கியிருப்பதனால் மொத்தமாக பார்க்கின்றபோது பின்தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த தரப்படுத்தலில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் பின்தள்ளப்பட்டமைக்கு உபவேந்தர் எவ்வாறு பொறுப்பை ஏற்க முடியும்? அவர் 232 Citations களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தனது Google Scholar Account ஐ மாற்றியிருக்கா விட்டால் அது இன்னும் பின்தள்ளப்பட்டிருக்குமல்லவா?

அதேவேளை தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் பின்தள்ளப்படுகிறது என்று ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றம் சுமத்திய ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் Citations களின் எண்ணிக்கை பூச்சியமாகும். அவர்கள் எவ்வித பங்களிப்பும் நல்கவில்லை. அவர்களுக்கு Google Scholar Account கூட இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மறுபக்கம் பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த அம்சங்களை மையாமக வைத்து பல்கலைக்கழகத்தை தரப்படுத்துகின்ற தரப்படுத்தல் ஒன்றில் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் 7வது இடத்துக்கு முன்னேறி பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றம் சுமத்துவோர் இது பற்றி அறிய மாட்டார்களா?

தற்போதுள்ள உபவேந்தர் இப்பல்கலைக்கழகத்தை பொறுப்பேற்றதன் பின்னர், நூற்றுக்கும் அதிகமான மாணவர் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பொறியியல் பீடம், தொழிநுடப்பீடம் என்பன நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன என்பது அடுத்த குற்றச்சாட்டு.

மாணவர்களுக்கு மத்தியில் அல்லது இரண்டு பீடங்களுக்கிடையில் சண்டை ஏற்படுவது, பிரச்சினைகள் எழுவது தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாத்திரம் நிகழும் ஒரு விடயமல்ல. பொதுவாக பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் துரதிஷ்ட நிகழ்வு. அந்த வகையில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை மோதலாக மாறியது. சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றமிழைத்த மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த விசாரணை செயன்முறைகளின்போது சுமார் இரண்டரை மாத காலம் அளவு குறித்த ஒரு பீடத்தின் கற்றல் நடவடிக்கைகளை தொடர முடியாமல் போனது. ஆனாலும் குறித்த பீட மாணவர்களது பரீட்சை நடவடிக்கை பாதிக்கப்படாத அளவுக்கு நிர்வாகம் அந்தப் பிரச்சினையைக் கையாண்டது.

இதனை வைத்து பொறியியல், தொழிநுட்ப பீடங்கள் 4 மாத காலத்துக்கும் மேலாக முற்றாக மூடப்பட்டது என்றும் தற்போதும் மூடி வைக்கப்பட்டுள்ளது போன்றும் திரிபுபடுத்தி, பூதாகரப்படுத்தி பிரசாரம் செய்வது அபத்தமானதல்லவா?

குற்றம் செய்யாத மாணவர்களுக்கும் வகுப்புத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது அபாண்டம். முறையான விசாரணைக்கூடாகவே குற்றமிழைத்த மாணவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு அறிந்து வைத்திருக்கிறது.

தவிரவும் பேராசிரியர் நாஜிம் அவர்கள் உபவேந்தராக பொறுப்பேற்றதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவியபோதும் பல்கலைக்கழகம் முற்றாக மூடப்படவில்லை. வேறு பல்கலைக்கழகங்கள் இரண்டு, மூன்று வாரங்கள் விடுமுறை வழங்கியிருந்தன. அந்த சூழ்நிலையிலும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் கவனமாக கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (பேராசிரியர் நாஜிமின் வருகைக்குப் பிறகு மாணவர்கள் 3 வருட கலைமானி கற்கையை இரண்டரை வருடங்களுக்குள் பூரணப்படுத்துகின்ற நிலை உருவாகியமை பற்றி மேலே விபரிக்கப்பட்டுள்ளது.)

பேராசிரியர் நாஜிமின் காலத்தில் விரிவுரையாளர் நியமனத்தின்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதே போல் கல்வி, நிருவாக நியமனங்களை மூப்பு அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. இவை அடுத்த குற்றச்சாட்டுகள்.
இவை வெறும் அபாண்டங்களாகும். விரிவுரையாளர் நியமனங்களின்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சட்ட திட்டங்களுக்கமையவே அவை நிடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவ்வாறே மூப்பு அடிப்படையிலேயே கல்வி நிர்வாக நியமனங்கள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை மூப்பு அடிப்படை என்பது வெறுமனே வயதை அடிப்பமையாகக் கொண்டதல்ல. குறித்த விரிவுரையாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை என்பவற்றினடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. இதனால் வயதில் குறைந்த விரிவுரையாளர்கள் கல்வித் தகைமை, தொழில் தகைமையைப் பெறுகின்றபோது அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களாக தரம் உயர்கிறார்கள். கல்வி நிர்வாக நியமனங்களின்போது சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முற்படுத்தப்படுகிறார்கள். இதன்போது வயதில் குறைந்த ஒருவர் சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப்படுவது இயல்பானது. இது எல்லா பல்கலைக்கழகங்களிலுமுள்ள நடைமுறை. இதுவே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயீல் காலத்தில் சாதாரண விரிவுரையாளர் ஒருவர் Students Support Services and Welfare பகுதிக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை விட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலர் இருந்தபோதும் அந்தப் பொறுப்பு சாதாரண விரிவுரையாளர் ஒருவருக்கே வழங்கப்பட்டிருந்தது. இதனை சிரேஷ்ட விரிவுரையாளர்கள் எவரும் கேள்விக்குட்படுத்தவில்லை. அவ்வாறே இன்றைய தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விரிவுரையாளர் அவர்கள் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயீல் காலத்தில் Department of Social Sciences பகுதியின் தலைவராக (Department Head) நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை விட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பலர் இருந்தனர். அவர் அப்போது விரிவுரையாளர் தரப்படுத்தலில் ஒன்பதாவது Rank இல்தான் இருந்தார். அவ்வாறிருந்தும் அந்தப் பொறுப்பு குறித்த விரிவுரையாளர் அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அந்த சந்தரப்பத்தில் இதனை யாரும் கேள்விக்குட்படுத்தவுமில்லை. அப்போது குறித்த விரிவுரையாளர் அவர்கள், Department Head களை நியமிப்பது உபவேந்தரின் அதிகாரம் என்ற நியாயத்தைச் சொன்னார். (Department Head களை நியமிப்பதற்கு உபவேந்தருக்கு சுதந்திரமும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளமை உண்மை) ஆனால், இன்று அதே நபர் மாற்றி கேள்வி எழுப்புகிறார். உபவேந்தரின் அதிகாரங்களை மறைத்து திரித்து பேசி வருகிறார். அவர் தற்போது கனிஷ்ட விரிவுரையாளர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் வழங்கப்படுவதாக அங்கலாய்ப்பதை என்னவென்று சொல்வது?

ஒரு நபருக்கு பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை அது பல்கலைக்கழகத்தின் தேவை மற்றும் விரிவுரையாளர்களின் செயல்திறன், ஆர்வம், தன்னார்வமாக முன்வருதல் என்பவற்றை மையமாகக் கொண்டு ஒரு சிலருக்கு ஒரு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பொறுப்பேற்றதன் பின்னர் இங்குள்ள ஆசிரியர்கள் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. உபவேந்தரின் நடவடிக்கையினால் ஆசிரியர்களின் ஆய்வுக்கான நிதிகூட திரும்பிச் செல்கின்றது என்பது தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அடுத்த குற்றச்சாட்டு.

மற்றுமொரு சுத்தமான அபாண்டமே இது. பேராசிரியர் நாஜிமின் வருகைக்குப் பிறகு உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பல விரிவுரையாளர்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சில விரிவுரையாளர்கள் தமது உயர் கல்வியைத் தொடர்கின்றனர். அது குறித்த தகவல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் பெற்றுக் கொள்ளலாம்.

உயர் கல்வியைத் தொடர சம்பளத்துடன் கூடிய கற்கை விடுமுறை (Study leave) வழங்கப்படுவது பல்கலைக்கழக நடைமுறை. M.A. (Master of Arts) கற்கைக்கு 24 மாதங்களும் Ph.D (Doctor of Philosophy) கற்கைக்கு 39 மாதங்களும் சம்பளத்துடன் கூடிய கற்கை விடுமுறை வழங்கப்படுகிறது. M.A. யைத் பூரணப்படுத்திய கையோடு அங்கிருந்நதவாறே Ph.D ஐ தொடர்வதாயின் 45 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய கற்கை விடுமுறை வழங்கப்படுகிறது. இவ்வாறான கற்கை விடுமுறை பெறுகின்றபோது அவர்கள் ஓர் ஒப்பந்தம் (Bond and agreement) ஒன்றில் கைச்சாத்திட வேண்டும். குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்துவிட்டு நாடு திரும்புவதாக உடன்பட்டு கையொப்பமிட வேண்டும். அவ்வாறே அவர்கள் குறித்த காலப் பகுதிக்குள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இன்னும் மேலதிக காலம் தேவைப்படுமாயின் அவர்கள் கணிசமானளவு சம்பளமற்ற விடுமுறையையும் பெறலாம். குறித்த அந்தக் காலப் பகுதிக்குள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்துவிட வேண்டும். அவ்வாறு விடுமுறை பெற்றும் கற்கைநெறியை குறித்த காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யா விட்டால் அது ஒப்பந்தத்தை மீறியதாக (Bond Violation) கருதப்படும். இவ்வாறு ஒப்பந்தம் மீறப்பட்டால் அவர்கள் உடன்பட்டதற்கிணங்க குறித்த தொகைப் பணத்தை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்த வேண்டும். அந்த நிபந்தனையினடிப்படையிலேயே அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய கற்கை விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு அரசாங்கத்தின் கற்கைநெறி விடுமுறை ஒப்பந்தத்தை மீறிய (Bond Violation இல் ஈடுபட்ட) சில விரிவுரையாளர்கள் குறித்து அரசாங்க கணக்காய்வாளரின் அறிக்கை (Auditor Report) கேள்விக்குட்படுத்தியது. குறித்த விரிவுரையாளர்கள் மீளச் செலுத்த வேண்டிய தொகையை ஏன் இதுவரை பல்கலைக்கழகம் எமக்கு சமர்ப்பிக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பி அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. இது இறுதியில் கோப் குழுவிற்கும் சென்றது. விளைவாக Bond Violation இல் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் குறித்த தொகையை மீளச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால் அவர்களும் மாதாந்த அடிப்படையில் அதனை மீளச் செலுத்தினர். இந்த சட்டம் வேறு பல்கலைக்கழகங்களில் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது. ஒப்பீட்டு ரீதியில் தென் கிழக்கு பல்கலைக்கழகம் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் மென்போக்கை கடைபிடித்து வருகின்றது.

இவ்வாறான சட்ட நடவடிக்கைகளின்போது குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் உபவேந்தர் மீது தமது கோபக் கணைகளை எறிகின்றனர். அவர் மீது சேறு பூச முனைகின்றனர். இத்தகைய ஒப்பந்த மீறல்களை உபவேந்தர் கண்டும் காணாதது போல் செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இவ்வாறு சட்டத்தை தற்போதைய உபவேந்தர் நடைமுறைப்படுத்துவதனால் விரிவுரையாளர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தயங்குவதாகவும் கூறுகின்றனர். இது சிறுபிள்ளைத்தனமான வாதமல்லவா?

மற்றுமொரு விடயமும் இங்கு சொல்லப்பட வேண்டும். அதாவது ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய தென்கிழக்கு பல்கலைக்கழ ஆசிரியர் சங்க உறுப்பினர்களுள் ஒருவருக்கு எதிராக பொது மகன் ஒருவரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது குறித்த அந்த விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக தரமுயர்த்தப்பட்ட முறை சட்டத்துக்கு புறம்பானது என்ற அடிப்படையிலேயே அந்த வழக்கு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விரிவுரையாளராக உள்வாங்கப்படும் ஒருவர் கூடியபட்சம் எட்டு வருடங்களுக்குள் பட்டப் பின் படிப்பை பூர்த்தி செய்து நிரந்தர விரிவுரையாளரக (Permanent Lecturer) தன்னை தரமுயர்த்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்த கால எல்லைக்குள் தன்னை நிரந்தர விரிவுரையாளராக தரமுயர்த்த தவறுபவர் விரிவுரையாளராக பணியாற்ற தகுதியற்றவர். அவர் நீக்கப்பட வேண்டும் என்பது சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள பொதுவான சட்டம். இது எல்லா பல்கலைக்கழகங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது.

ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய தென்கிழக்கு பல்கலைக்கழ ஆசிரியர் சங்க உறுப்பினர்களுள் ஒருவர் இவ்வாறு எட்டு வருடங்களுக்குள் பட்டப் பின் படிப்பை பூர்த்தி செய்து நிரந்தர விரிவுரையாளராக தன்னை தரமுயர்த்த தவறியவர். கடந்த உபவேந்தர் காலப் பகுதியில் இவர் நீக்கப்பட்டிருக்க வேண்டியவர். அவர் எட்டு வருடங்கள் கடந்து மிகவும் நீண்ட காலத்துக்குப் பின்னரேயே M.A. (Master of Arts) கற்கையை பூர்த்தி செய்தார். அதன் பின் சிரேஷ்ட விரிவுரையாளர் நியமனத்துக்கான நேர்காணல் விண்ணப்பம் கோரப்படாத நிலையிலேயே அவர் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடந்த உபவேந்தர் காலத்தில் நியமனம் பெற்றார். இதனை கேள்விக்குட்படுத்தியே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரமும் கோப் குழுவிற்கு சென்றுள்ளது. எந்த அடிப்படையில் குறித்த இந்த நபர் சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அது கேள்வி எழுப்பியது. இது இன்று வரை பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்ற ஒரு விடயம்.

குறித்த அந்த நபர் தனது பிழைகளையெல்லாம் மறைப்பதற்கே இவ்வாறு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகத்தை குழப்புகிறார். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உபவேந்தர் மீதான பொது மக்கள் அபிப்பிராயத்தை திசை திருப்புகிறார்.

பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் இரண்டாவது தடவையாகவும் உபவேந்தராக வந்தால் இது போன்ற விடயங்களுக்கு நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சமே இந்தப் புரளிகளுக்கு காரணம் என்பது இப்போது புரிகிறதல்லவா?



[
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -