வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறவேண்டும்


NFGGஊடகப் பிரிவு-

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது.

இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் தவிசாளார் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மீள்குடியேறும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களுக்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விசேடமாக கவனம் சொலுத்தப்பட்டது. l990ல் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஏறத்தாள 1700 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.

 கடந்த 27 வருடங்களில் இவர்கள் கிட்டத்தட்ட 4500 குடும்பங்களாக மாறியுள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே தமது பாரம்பரிய வாழ்விடமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்கான அடிப்படை உரிமைகளை கொண்டவர்கள் ஆவர். இவர்களில் ஏறத்தாழ 3020 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேறியுள்ளனர். இவர்களில் சொந்தக் காணிகளை கொண்டிருந்த கிட்டத்தட்ட 1500 குடும்பத்தினரை தவிர மிகுதியான 1520 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவர்கள் தாம் நிரந்தரமாக வாழ்வதற்கான அரச காணிகளை கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று காணிக் கச்சேரிகளில் இவை பரிசீலிக்கப்பட்டு முதல்கட்டமாக கிட்டத்தட்ட 920 எண்ணிக்கையான குடும்பங்களுக்கு அரச காணிகளை ஒதுக்குவதற்கான அங்கீகாரமும் வழங்ப்படது. அதன்படி , முறிப்பு என்ற பகுதியில் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் அது நடைபெறவில்லை. 

அதற்கு மாற்றீடாக, கூழாமுறிப்பு என்ற இடத்தில் காணிகளை பங்கீடுவதற்கான முயற்சி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது இதற்கான கடும் எதிர்ப்பை TNA கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான அணியினர் தொடர்சியாக தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி இம்மீள்குடியேற்றம் தொடர்பாக முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்பும் வகையில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன.

 இந்நிலைமை தொடர்ந்தால் , தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு இடையிலான உறவில் அபாயகரமான பாதிப்புகள் மீண்டும் உருவாக்கக் கூடிய நிலை காணப்படுகிறது.

வடக்கில் நடைபெற உள்ள தேசிய மீலாத் தின நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த காணி பகிர்வினை தாமதிக்காமல் மேற்கொள்வது அவசியமாகும்.

இந்த நிலைமைகளை எடுத்துக்கூறிய NFGG பிரதிநிதிகள், TNA தலைமைத்துவம் நேரடியாக இதில் தலையீடு செய்து நீதியான முறையில் இது தீர்க்கப்படுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை TNA யிடம் முன்வைத்தனர்.

மேலும் கடந்த 20l3 ம் ஆண்டு வட மாகாண சபை தேர்தலின் போது TNA – NFGGக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக 90களில் வெளியேறிய குடும்பங்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பரம்பரையினரும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அத்தனை உரிமைகளையும் கொண்டுள்ளனர் என்ற விடயம் TNA – NFGG உடன்படிக்கையில் மிகத்தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்களையும் TNA தலைமைத்துவத்திடம் NFGG பிரதிநிதிகள் மிக தெளிவாக எடுத்துரைத்தனர்.

NFGG யினால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை TNA தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக வடக்கில் இருந்து வெளியேறிய மக்களுக்கும் அவர்களது சந்ததியினர் அத்தனை பேருக்கும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான உரிமை இருக்கிறது என்ற அடிப்படை நியாயத்தினையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி சுமுகமான தீர்வு ஒன்றினை விரைவாக எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் NFGG யிடம் அவர்கள் உறுதியளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -