மோசடிகளுக்கு உடந்தையான பேரவை உறுப்பினர்களை நீக்குமாறு கிழக்குப்பல்கலை மாணவர் வேண்டுகோள்!

த.நவோஜ்-
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகளைக் கண்டும் காணாமலும் மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத முன்னைய பேரவையில் அங்கம் வகித்து மீண்டும் நியமனம் பெற்ற உறுப்பினர்களை நீக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத பேரவை உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கடந்த வருடம் பேரவையில் இருந்து கொண்டு அதிகாரத்துஸ்பிரயோகம் செய்து பலமுறைகேடுகள் இடம்பெறக் காரணமாக இருந்த மூதவை உறுப்பினர்கள் இருவர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.

குறித்த இரு உறுப்பினர்களும், பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்ட போது அதற்கு ஆதரவாகவும் செயற்பட்டனர்.

அதேவேளை இவர்களில்!

1. ஒருவர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும், பேரவை உறுப்பினராகவும் எவ்வாறு செயற்பட முடியும்?. பேரவை இடம் பெறும் வேளையில் குறித்த பேரவை உறுப்பினர் மது அருந்துவதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் அவரை கண்கானிக்க தொடங்கினோம். அது உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்வதுடன் உபவேந்தருக்கு விசுவாசமாகவும் செயற்பட்டார்

2. கடந்த பேரவையில் அங்கம் வகித்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மறைமுகமாக கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வினியோகஸ்த்தராகவும், வழங்குனராகவும் தொழில் பட்டார் என்பதாக அறிந்தோம். இவர் இங்கு இடம் பெற்ற மோசடிகளை அறிந்தும் அறியாமல் தொழில் பட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தினால் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 156 பக்க முறைகேடுகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் இடம் பெற்ற காலப்பகுதியிலும் இவர்கள் பேரவையின் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.

எனவே இருவரையும் 2015ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குமாறு மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

எமது பல்கலைக் கழகப் பேரவை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கௌரவம், சமூக அபிவிருத்தி, மாணவர் கல்வி மற்றும் நலன் என்பவற்றுக்கு மேலாக எமது கலாசாரப் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களை அடைவதற்காக செயற்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

எமது பல்கலைக் கழகப் பேரவையானது சமூகசேவை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமே தவிர அரசியல் மயப்பட்டதாகவோ வெளி அமைப்பினரது சுயநல தன்மை கொண்டதாகவோ அமைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

· பேரவையின் புதிய பெயர் பட்டியலைத் தயார் படுத்தியர்கள் யார்?
· கடந்த காலத்தல் பேரவை நியாயமாகவும், நேர்மையாகவும் கடமையாற்றிய பேரவை உறுப்பினர்களைத் தவிர்ந்து இந்த இரு நேர்மையற்றவர்களை தெரிவு செய்ததன் காரணம் என்ன?

· முறைகேடுகள் இடம் பெற்ற வேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்களை சிபாரிசு செய்தது யார்?
· சிபாரிசு செய்த இவர்களின் துரநோக்கம் என்ன? கொஞ்சம் சிந்தியுங்கள்!

ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றவேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீண்டும் பேரவையின் பெயர் பட்டியலிலும் இணைத்து அனுமதி அளித்தமை ஊழலுக்கு எதிரான புதிய ஜனநாயக அரசாங்கத்தின் மீது எமக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இதுதானா புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நல்லாட்சி?

கடந்த பேரவையில் இருந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுர் அரசியல் தலைவர்கள் மற்றும் மத்திய அரசில் அங்கம் பகிக்கும் பலருக்கும்; இவர்கள் தொடர்பான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் இவர்கள் புதிய பேரவையில் இடம் பெற்றது எவ்வாறு?

குறிந்த இருவரையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு பல்கலைக்கழக அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக் கூடியவர்களை எந்த விதமான இன, மத வோறுபாடு இன்றி நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.

கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களை உள்ளடக்கிய போதிலும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலையில் இருந்தும் கடந்த காலங்களில் பேரவை உறுப்பினர்கள் எவரும் திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்படாத நிலையில் 'முன்னைய பேரவையின் உறுப்பினர்கள் இருவருக்கும் பதிலாக நியமிகப்படுபவர்களில் ஒருவர் திருகோணமலை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென கிழக்குப் பல்கலைக் கழகம் மாணவர் ஒன்றியம் வேண்டுகின்றது.'

அவ்வாறு இரு உறுப்பினர்களையும் புதிய பேரவையில் இருந்து நீக்காத விடத்து மாணவர்களின் தொடர் போராட்டம் மூலமாக அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சம்மந்தப்பட்ட உறுப்பினர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்களாக பேரவையில் இருந்து விலகிக் கொள்வது பின்வரப்போகும் போராட்டங்களையும் கடந்த காலங்களில் பேரவை பற்றிய பல இரகசியங்கள் வெளிவராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என கூறிக் கொள்கின்றோம்.

எமது இந்த கோரிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும், கௌரவ உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -