அம்பலமானது தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிகாரத் துஸ்பிரயோகம்!

எம்.ஏ.அஹமட்-
தென்கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பீடத்தினால் 'உள்ளக ஆய்வுப்பட்டறை மாநாடு' ஒன்று இன்று 2015.01.26ம் திகதி நடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் பிரதம அதிதியாக பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.இஸ்மாயீல் அவர்கள் கலந்து கொள்வது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, இன்று கலைப்பீட கலையரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனினும், இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பவர்கள் சமூகம் தராமையினால், குறித்த கலைப்பீடத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட விசேட பிரிவில் கல்விகற்க்கும் 200 மாணவர்களை கலைப்பீடாதிபதி எம்.ஏ.ஜப்பார் அவர்கள் தனது அதிகாரத்தை பலவந்தமான முறையில் பயன்படுத்தி இந்நிகழ்வில் கலந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். 

இது அவரது அதிகாரத் துஸ்பிரயோகமாகும் எனப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் அங்கலாய்ப்புடன் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது, 

தென் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் கலைப்பீடத்தில் கல்வி பயிலும் 2ம் மற்றும் 3ம் வருட விசேட துறை மாணவர்கள் இன்று இவ்வருடத்திற்கான முதலாம் பருவப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சகல ஆயத்தங்களையும் மேற்கொண்டு பல்கலைக்கழகப் பரீட்சை மண்டபத்திற்குச் சென்று பரீட்சை எழுத ஆரம்பித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பரீட்சை மண்டபத்திற்குள் நுழைந்த கலைப்பீடாதிபதி ஜப்பார் பரீட்சை மேற்பார்வையாளரின் முன்னணுமதி எதுவுமின்றி மாணவர்கள் அனைவரையும் உடனடியாக கலைப்பீட கலையரங்கிற்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். 

ஏன்? என மாணவர்கள் கேட்டதற்கு இன்று பரீட்சை மாலை நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலையில் உள்ளக ஆய்வுப்பட்டறை நடைபெறவுள்ளதனால் அங்கு செல்லுமாறும் பரீட்சையை விட அதுவே முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இன்றைய தினம் தோற்றவிருந்த பரீட்சையானது கைவிடப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாணவர்கள் தமது நிலைபற்றி கவலையடைந்துள்ளதுடன் மன அழுத்தத்திற்கும்; உள்ளாகியுள்ளனர். 

அத்தோடு, சில மாணவர்கள் இது தொடர்பாக தங்களது உளக்குமுறல்களை வெளிப்படுத்துகையில், இப்பல்கலைக் கழகமானது யாருக்காகவுள்ளது? எனவும் இவ்வாறான பீடாதிபதிகள் மாணவர்களது நலன்களை பலியிடுவதாகவும் காலத்திற்கு காலம் இங்குள்ள வளங்கள் அனைத்தையும் துஸ்பிரயோகம் செய்து இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி பணம் சம்பாதிப்பதாகவும் அதற்கு தாங்களே சம்பலாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று தோன்றியுள்ள புத்துயிரான புத்தாக்க அரசாங்கமானது தனது நல்லாட்சியின் ஒரு அங்கமாக பல்கலைக் கழகங்களை நிருவகிக்கின்ற விதத்தில் மிகவும் பொருத்தமான ஒரு உயர் கல்வி அமைச்சரை நியமித்திருக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான பீடாதிபதிகளின் நடவடிக்கையானது அவரது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் உள்ளவர்கள் குமுறுகிறார்கள்.

இதேவேளை குறித்த பீடாதிபதி ஜப்பார் அவர்களது விரிவுரையாளர் நியமனம் தொடர்பாக பாரிய மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்று நிலுவையிலுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரத்திலிருந்து நம்பகரமான தகவலொன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -