"முஸ்லிம் சமூகத்தின் முடிவே முஸ்லிம் காங்கிரஸின் முடிவாகியது"?

அபூஸமா-

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தலைவருடன் மிக நெருங்கிய இரகசிய வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

இன்று காலை (11.12.2014) கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற ''பைஅத்'' நிகழ்வின் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த இறுதித் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

முஸ்லிம் காங்கிரஸுக்கும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான நிபந்தனைகளுடனான ஒப்பந்தங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லையென்றும் பொதுவான கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த ஆதரவு வழங்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருகிறது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் 
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களும் தமது அமைச்சர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து தாறுஸ் ஸலாமில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்சியின் உத்தியோகபூர்வமான முடிவு அறிவிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இடம்பெறவுள்ளதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் எக்காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில்லை என்ற உறுதியான தீர்மானத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆரம்பம் முதலே இருந்து வந்ததாகவும், ஆனாலும் அவசரமான முடிவுகளை மேற்கொள்ளும்போது கட்சி மற்றுமொரு பிளவை எதிர்கொள்வதனை உணர்ந்து கொண்டதனாலேயே காலதாமதம் செய்ததாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் கட்சி பாரியளவில் பிளவுபடுவது கட்சிக்கும் சமூகத்துக்கும் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் பொறுமையுடன் காய் நகர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தலைவரின் முடிவுகளுடன் உடன்பட மறுக்கலாம் என நம்பப்பட்ட உறுப்பினர்களை மிகவும் சமயோசிதமாகக் கையாள்வதற்கான உபாயமாகவே தனது முடிவினை வெளியிடுவதற்கு தலைவர் ஹக்கீம் தாமதப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. 

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இக்காலதாமதத்தின் மூலம், முஸ்லிம் சமூகத்தின் பலதரப்புக்களிலிருந்தும் நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் ஒரு அழுத்தத்தை குறிப்பிட்ட உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கச் செய்து கட்சியின் முடிவுகளோடு அவர்களையும் உடன்பட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலையைத் தலைவர் ஹக்கீம் தோற்றுவித்திருந்தார்.அதன் இறுதிக்கட்ட நகர்வுதான் இன்றைய கிழக்கு மாகாண உலமாக்களுடனான சந்திப்பாகும் எனவும் மேலும் அறியவருகிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள முக்கிய உலமாக்களுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையிலான மிக முக்கியமான இக்கலந்துரையாடல் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தாறுஸ்ஸலாமில் நடைபெற்றது.
இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்களின் மனநிலை, நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் தேசிய அரசியல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் பிரதிநிகள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற,மாகாண சபை மற்றும் ஏனை மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் தலைமைத்துவக் கட்டுப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக உலமாக்களால் விளக்கிக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் எந்த நிபந்தனைகளுமில்லாமல் உளப்பூர்வமாகக் கட்டுப்படுவதாகவும்,அதற்காக தம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாகவும் ஏகமனதாகத் தெரிவித்த உறுப்பினர்கள் தலைவரிடம் உலமாக்கள் முன்னிலையில் ''பைஅத்''எனும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் பசீர் சேகுதாவூத் உட்பட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும், இரண்டு மாகாண சபை உறுப்பினர்களையும் தவிர ஏனைய அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.கலந்து கொள்ளாத உறுப்பினர்களில் மூன்று பேர் தவிர்க்க முடியாத காரணங்களால் தாம் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் இருந்தபோதிலும் தலைமைத்துவத்தின் முடிவே தங்களின் முடிவாகும் என தலைவருடன் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் பின்னர் அறியக்கிடைத்தது.

முஸ்லிம் காங்கிரஸின் எதிரணியுடனான இணைவு தற்போதைய தேர்தல் நிலவரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக
எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வமான முடிவு வெளியானதன் பின்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து மேலும் பல முக்கிய புள்ளிகள் பாய்வதற்குத் தயாராகவிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் இம்முடிவானது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பெரும் உற்சாகப்படுத்துகின்ற அதேவேளை
தற்போது மைத்திரிபால சிறிசேன அணியை ஆதரித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் எதிராளிகளை நிச்சயமாக எரிச்சலடையச் செய்யப்போகிறது.

எவ்வாறாயினும் ஒப்பீட்டளவில் சிறியளவான சேதாரங்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தல் எனும் காண்டத்தை கடக்கும் என்பதே எமது கணிப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :