ஜனாதிபதித் தேர்தலில் மு.கா வின் ஆதரவு இவருக்கே?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருடனும், அதன் செயளாலர் நாயகத்துடனும், கட்சியின் பெரும்பாலான உச்ச பீட உறுப்பினர்களுடனும் உரையாடி அவர்களின் நாடி பிடித்துப் பார்த்த போது கல்முனைக் கரையோர மாவட்டுத்துக்கான அங்கீகாரத்தையும், நாட்டில் பரந்து பட்டு வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பாதுகாப்பின் உறுதிப்பாட்டையும் மேற்கொள்கின்ற வேட்பாளருக்கே நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என யூகிக்க முடியுமாயுள்ளது. மு.கா.வின் ஊடகப்பணிப்பாளரும், அக்கறைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம் ஹனீபா மதனி குறிப்பிட்டார். 

கடந்த 21ம் திகதி மாலை ஸ்ரீ.மு.கா கட்சியின் அக்கரைப்பற்றுப் பிரதேச பிரதான காரியாலயத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரின் தலைமையில் கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சந்தேகங்கள் புரிந்துணர்வின்மை என்பவற்றுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரால் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மு.கா எந்த வேட்பாளரை ஆதரிக்கவிருக்கின்றது? எனும் கேள்விக்கு பதலளிக்கும் போதே ஹனீபா மதனி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதிரிப்பது என்ற முடிவை மு.கா இன்னும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு ஒர் முடிவை எடுக்கின்ற போது மேற்படி கல்முனை கரையோர மாவட்ட விவகாரமும் , முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயமும் அந்த முடிவில் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பதைத் திட்டமாக எம்மால் யூகிக்க கூடியதாகவுள்ளது. 

மேலும் அவர் அங்கு கூறுகையில், கல்முனைக் கரையோர நிர்வாக மாவட்டக் கோரக்கைக்கு இனவாதம் பூசுவதற்கும், அதனைப் பிரிவினை வாதமாகக்காட்டுவதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் நிர்வாக ரீதியான கருமங்களை அவர்களது சொந்த மொழியில் மேற்கொள்வதற்கான முயற்சி என்பதுதான் இதன் யதார்த்தமாகும். 1978ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மொறகொட ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்தியே தொடர்ந்தேர்ச்சியாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகின்றது. 

பெரும்பான்மையாக தமிழைப்பேசுகின்ற மக்கள் குழுமத்தையுடைய அம்பாறை மாவட்டக் கச்சேரியின் நிர்வாகம் சிங்கள மொழியில் நடைபெறுவதால் தமிழ் பேசும் மக்கள் நீண்ட நெடுநாட்களாகவே சிரமப்பட்டு வருகின்றார்கள்.

இதனை தீர்த்து வைப்பதற்காகவே 1978ம் ஆண்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட மொறகொட ஆணைக்குழு கல்முனை உருவாக்கமே இப்பிரச்சினைக்கான தீர்வாகும் என்று பரிந்துறைத்திருந்தது. கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைய வேண்டும் என்றும் கருத்துரைத்திருந்தது. 

தொடர்ந்து 2002ல் ஆட்சியில் இருந்த ஐ.தே கட்சி அரசினால் இந்த விடயம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. இதன் படி அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் கல்முனை கரையோர மாவட்டம் அமைப்பதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த கரையோர மாவட்டத்தின் செயலகம் எங்கே அமைய வேண்டும் என்ற பிரதேசவாதமான போட்டிகள் அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டன. இதனால் மீண்டும் இக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. 

2012ல் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் முன்னனி ஆட்சி அமைப்பதற்கு மு.கா வின் உதவியை வேண்டி நின்றது. அந்த ஆதரவை அரசுக்கு வழங்குவதற்கு மு.கா சில நிபந்தனைகளை முன்வைத்தது. அதிலும் இக்கரையோர மாவட்டத்தை ஸ்தாபிப்பதென்பதே முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது. அதாவது மொறகொட ஆணைக்குழுவின் சிபாரிசான கரையோர மாவட்டத்தை காலந்தாழ்தாது உருவாக்க வேண்டும் என்பதாகும். அந்த நிபந்தனை கூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. 

2002ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட இவ் விடயத்தை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜயதாச ராஜபக்ச அவர்கள் இது ஓர் பிரிவிணைவாதக் கோரிக்கை என்று இந்நாட்களில் பாராளுமன்றத்தில் பிரஸ்த்தாபித்திருப்பதும், இந்த நாட்டின் பிரதமர் அதற்கு ஏற்றாற் போல் ஒத்துப்பாடியிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும். 


1955ம் ஆண்டில்; இந்நாட்டில் 20 நிர்வாக மாவட்டங்கள் இருந்திருக்கின்றன. பின் தேவைக்கேற்ப சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு தற்போது 25 நிர்வாக மாவட்டங்கள் நடைமுறையிலுள்ளன. கல்முனைக் கரையோர மாவட்டமும் உருவாக்கப்படுமானால் நாட்டில் 26 மாவட்டங்கள் நிர்வாக மாவட்டங்களாக ஆகிவிடுகின்றன. இதனையே இன்று ஓர் பயங்கரமான பிரிவினை வாதமாகக் சிலர் காட்ட முட்படுகின்றனர். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்கள் தலா ஒவ்வொரு தொகுதியையே உள்ளடக்கி இருக்கின்றன. உத்தேச கல்முனை கரையோர மாவட்டமோ கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை, ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. 

கல்முனை கரையோர மாவட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி கல்முனை மாநகர சபையிலும், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளிலும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. 

ஆனால் நூறு வீத முஸ்லிம்களைக் கொண்ட அக்கறைப்பற்று மாநகர சபையில் இது தொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணை நவம்பர் மாதம் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் கூட சேர்க்கப்படவில்லை. 

மூன்று வார கால அவகாசத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கல்முனை கரையோர மாவட்டம் சம்பந்தமான தனி நபர் பிரேரணையை அக்கறைப்பற்று மாநகர சபை அதன் நிகழ்ச்சி நிரலில் கூட சேர்க்க மறுத்திருப்பதும், ஆலையடி வேம்பு பிரதேச சபையில் கரையோர மாவட்டம் தேவையில்லை என பிரேரணை நிறைவேற்றியிருப்பதும் தமக்கு வாக்களித்து தம்மை இச் சபைகளுக்கு பிரதி நிதிகளாக அனுப்பி வைத்து, இச்சபைகளுக்கு வரியும் செலுத்துகின்ற தமிழ் பேசும் மக்கள் நலனில் எவ்வளவு கரிசனையற்றுத் தொழிற்படுகின்றனர் என்பதனை இவ்விரு சமூகங்களிலுமுள்ள தமிழ் மொழி பேசுகின்ற புத்திஜீவிகள் மிக விசனத்துடன் நோக்குகின்றனர். 

அக்கறைப்பற்றில் தமிழ் பேசும் முஸ்லீம்களும், ஆலயடி வேம்பு வாழ் தமிழர்களும் தமிழ் மொழியிலான ஓர் கச்சேரி உருவாவதற்கு ஏன் தமது எதிர்பார்ப்பை வெளியிடுகின்றனர் என்பது புரியாத புதிராகவே தெரிகின்றது. 

கடந்த 30 வருடங்களாக நடைபெற்று முடிந்த யுத்தத்தின் எச்சங்களாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பாரிய விரிசல்களும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற உண்மையை எவரும் மறுதலிக்க முடியாது. மக்களுடன் தொடர்புடைய அத்தனை விவகாரங்களும் இங்கு தமிழருக்கும், முஸ்லீம்களுக்குமென பாகப்பிரிவினை செய்யப்பட்டுவிட்டன. 

ஆஸ்பத்திரிகள், பிரதேச செயலகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பாடசாலைகள் போன்ற அனைத்து அரச இயந்திரங்களும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித் தனையே ஏற்படுத்தப்பட்டு இச் சமூகங்களின் நிரந்தர பிரிவினைக்குரிய அத்திவாரங்கள் உறுதியாகப் போடப்பட்டுள்ளன. வீதிகள் மட்டுமே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமென வேறு வேறாக பிரிக்கப்படவில்லை. எனவே இவ்வாறான பிரிவினைகளை ஐக்கியத்தின்பால் இட்டுச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்ற திருப்பு முனையாகவும், தொடக்கப் புள்ளியாகவும் கல்முனைக் கரையோர மாவட்டத்தை தமிழ் முஸ்லீம் சமூகம் பார்க்க வேண்டும். 

இரு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது அவை பேசித்தீர்க்கப்பட வேண்டும். மாறாக அதனை சமூக நலன்களுக்கு எதிராகப் பிரயோகிக்கக் கூடாது. பிரச்சினைகள் அண்ணன் தம்பிக்கிடையிலும், வாப்பா மகனுக்கிடையிலும் ஏற்படுவதை நாம் பார்க்கின்றோம். நாம் இரு இனங்களுக்கிடையில் அது ஏற்படுவதை ஆச்சரியமாகவோ விவகாரமாகவோ பார்க்க முடியாது. யாவும் நியாயமான முறையில் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இதுவே விவேகமும் நேர்மையுமாகும்' என்றும் கூறினார். 

தமிழ், முஸ்லிம், சிங்கள இனத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில் கி.மா சபை உறுப்பினர் தவம், அக்கறைப்பற்று மத்திய குழுவின் பிரதித் தலைவர் மர்ஜூன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
ளடஅ_hயnகையளூலயாழழ.உழஅ 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :